அர்த்தமுள்ள இந்துமதம் - புண்ணியம் திரும்ப வரும் !
மதத்துறையை `ஆத்மார்த்தத் துறை’ என்பது அதனால்தான்.
நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவறு, தவறல்ல; அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாவக்கணக்கில் சேர்க்காதே.
சிறுவயதில் கடன்தொல்லை தாங்காமல் நான் `திருடியிருக்கிறேன்’, என் தாயின் பணத்தைத்தான்.
ஆனால் திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன்.
கடவுளை வேண்டியிருக்கிறேன் “இறைவா மன்னி” என்று.
அந்தத் தவற்றைக் கடவுள் மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின் மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.
சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.
இவ்வளவு அறியாமைக்கு இடையிலும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாற்றுகிறது.
ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?
என் தாய் தகப்பன் செய்த தருமங்களை நினைக்கிறேன்.
`தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துக்களின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது, செய்த புண்ணியம் தலையைக் காக்கிறது.
ஆம்; செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்டகாலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான் தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
இந்து மதத்தின் ஒவ்வொரு அணுவையும் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.
சாதாரணப் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.
அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன
ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார்.
அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.
“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.
அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார்.
அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது:
“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”
ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:
“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது,
“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”
தேரையின் ஆவி முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - புண்ணியம் திரும்ப வரும் ! , நான், புண்ணியம், செய்த, குறைவு, அறியாமல், புத்தகங்கள், எனக்கு, அந்த, செய்யும், அர்த்தமுள்ள, வரும், தேரைக், ராமபிரான், திரும்ப, பாவம், காப்பாற்றுகிறது, என்பது, சொன்னது, நன்றி, அம்பை, இந்துமதம், என்னைக், அப்பொழுதே, குஞ்சு, பெருமானே, தேரை, தேரையே, பிழைகள், ஊன்றிய, என்னுடைய, உண்டு, நோக்கியே, பொறுப்பேற்றுக், சிறந்த, தவறு, உதவி, அள்ளி, என்னைப்போல், என்னை, செய்கின்ற