அர்த்தமுள்ள இந்துமதம் - புண்ணியம் திரும்ப வரும் !
ஆனால், செய்த வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம் கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காரச் செட்டியாரையும், ஆச்சாள்புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய் அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக் கொண்டு, அந்தப் `பாபாத்மா’ தினமும் கோவிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி; இரண்டு காதிலும் கதம்பப் பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான், கந்தன்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனும்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டுவிட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது, அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பிவிட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளேபோனபோது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்காரர், ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
`உண்மையே தெய்வம்,’ `அன்பே தெய்வம்’ என்று இந்துமதம் சொன்னது அதனால்தான்.
`நம்பினோர் கெடுவதில்லை’. இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது உண்மை தான்.
ஆனால் `கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - புண்ணியம் திரும்ப வரும் ! , வரும், புத்தகங்கள், புண்ணியம், இந்துமதம், நான், திரும்ப, செய்த, அர்த்தமுள்ள, கிடைக்கிறது, என்பது, செய்யும், கேலி, தராசு, நீயே, சிறந்த, காட்டாமல், அந்த, வேறு, போய்