அர்த்தமுள்ள இந்துமதம் - வாசலில் அமீனா நிற்கிறான்
காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.
அதைப் பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்:
“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”
தமிழர் பதில் சொன்னார்:
“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது”.
ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.
அன்று முதல் இந்துமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
இன்றும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.
`யாக்கை நிலையாமையை’ இந்துசமய தத்துவஞானிகள் அடிக்கடிக் கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.
வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.
`விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…’
என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.
இந்த ஞானம், ஒவ்வொரு சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.
ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது, “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.
அதையே `மயான வைராக்கியம்’ என்பார்கள்.
“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.
`பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே, நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.
`இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.
இந்த உடல் இலவசமாகக் கொடுத்த பரிசு.
தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபகக் கடிதம்.
`நீ கையெழுத்துப்போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.
கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.
உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன்”.
என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.
உயிரை ஜப்தி செய்தவற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த அமீனாவுக்கு `யமன்’ என்றும், `கூற்றுவன்’ என்றும் பெயர் கொடுத்தார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில் நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.
அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு ஒருவழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச்செய்வது, இந்துசமயவாதிகளின் நோக்கங் களில் ஒன்றாகும்.
எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - வாசலில் அமீனா நிற்கிறான், புத்தகங்கள், வருகிறது, அமீனா, நிற்கிறான், வாசலில், இறைவன், என்பதை, ஒருநாள், அர்த்தமுள்ள, வேண்டும், இந்துமதம், தமிழர், விழுவதோ, கொடுத்த, உயிரை, ஜப்தி, என்றும், சாவதற்குள், நிலையாமையை, மனிதனை, போகிறது, ஆங்கிலேயர், சிறந்த, வாழ்ந்து, சுட்டிக், உணர்ந்து, மரணம், எண்ணம்