அர்த்தமுள்ள இந்துமதம் - சாதிகள்
ஆன்மிகத் துறையில் ஈடுபட்ட முதற்பிரிவினர், எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக்கவும், வழி காட்டவும் உருவாக்கப்பட்டனர்.
இரண்டாவது பிரிவினர், அரசியலில் ஈடுபடவும், நாட்டை நிர்வகிக்கவும் பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கவும் உருவாக்கப்பட்டனர்.
மூன்றாவது பிரிவினர், வாணிபம் நடத்தவும், பொருளீட்டி நாட்டின் செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டனர்.
இந்த மூன்று துறைகளிலும் பயிற்சியற்றவர்கள், உடல் உழைப்பாளிகளாக இருந்து தொழில்களை இயக்கவும், கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்ட நான்காவது பிரிவினரானார்கள்.
இந்த நான்கு பிரிவுகளுக்குள்ளேயுமே, அன்றைய மொத்த சமுதாயமே அடங்கி விடுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
நாகரிக உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி தோன்று முன்பு நாடுகள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலையைக் கணக்கெடுத்தே இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டன.
அந்தநாளில் பிரம்மப் பிரிவைச் சேர்ந்தவன் ஆன்மிகத் துறையில் மட்டுந்தான் ஈடுபட்டான்.
க்ஷத்திரியன் அரசியலிலும் போரிலும் மட்டுந்தான் ஈடுபட்டான்.
வைசியன் வாணிபத்தில் மட்டுந்தான் ஈடுபட்டான்.
(சூத்திரன் என்றால் `இழிமகன்’ என்று இந்து மதம் கூறுவதாக ஒரு பொய்யான வாதம் பலருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது.)
இந்து மதத்தையோ, `சூத்திரன்’ என்ற வார்த்தையையோ சரியாகப் புரிந்து கொள்ளாத எவனோ இட்டுக்கட்டி உரைத்த உரை இது.
`சூத்திரம்’ என்றால், இயக்கப்படுவதற்கான `இலக்கணம்’ என்று பொருள்.
`சூத்திரன்’ என்றால், `இயக்குகிறவன்’ என்று பொருள்.
(சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ அது)
ஆக அந்த நாளையச் சமுதாய அமைப்பின்படி இந்த நான்கு வருணங்கள் பிரிக்கப்பட்டன.
காலங்களால் சமுதாய அடிப்படை மாறி, அவரவர் ஏற்றுக் கொண்ட பணிகளும் மாறிவிட்டன.
மேற்கூறிய நான்கு பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களும் எல்லாத் தொழில்களிலும் காணப்படுகிறார்கள்.
ஆன்மிகத் துறையில் அனந்தராம தீட்சிதர் மட்டும் இல்லை; கிருபானந்தவாரியாரும் இருக்கிறார்.
அரசியலில் காமராஜர் மட்டும் இல்லை; ராஜாஜியும் இருக்கிறார்.
வாணிபத் துறையில் ஈடுபடாத சாதிகளே இல்லை.
அதுபோல உடல் உழைப்பிலும் எல்லாப் பிரிவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே, இந்து சமயம் தோற்றுவித்த வருணங் களின் நோக்கம் அடிபட்டுப் போய்விட்டது.
தாங்கள் மேற்சாதி என்று உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்களும், தாங்கள் கீழ்ச்சாதி என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், இன்று வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
என்றபடி, ஹரிஜன் ஒருவர் கலெக்டராக இருக்க அவருக்குக் கீழே பிராமணர் ஒருவர் தாசில்தாராக இருப்பது இன்று சர்வசகஜம்.
இந்துமதம் பிரித்த பிரிவுகள் தொழில் நோக்கம் மட்டுமே கொண்டவை.
ஆகவே, இன்றைய மாறுதல்களையும் வளர்ச்சியையும் இந்துமதம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறது.
தீண்டாமை என்பதும், தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும், வெறுப்பின் அடிப்படையிலே தோன்றிய சாதிப் பிரிவுகளாக இந்து மதத்தின் மூல வேதங்கள் எவையும் கூறவில்லை.
நாடார், முதலியார், நாயக்கர், செட்டியார் என்ற சாதிப் பெயர்களெல்லாம் அந்த நாளில் ஒவ்வொரு துறையில் பங்காளிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு இட்டுக் கொண்ட பட்டப்பெயர் அல்லது குடும்பப் பெயர்களே!
இந்தச் சாதிப்பெயர் எதையும் இந்து வேதங்களில் காண முடியாது.
காலப்போக்கில், அவ்வப்போது தோன்றிய உபன்யாசிகள், அவரவர் மனப்போக்கின்படி உருவாக்கிய பேதங்களே அன்றி, இவை இந்துமதம் உருவாக்கிய பேதங்களல்ல.
இன்றைய சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்களைத் தொழில் முறையில் பிரிக்க முடியாது.
காலத்தைக் கொண்டு கவிதையை ஆராய்வது போலத்தான் மதத்தையும் ஆராய வேண்டும்.
அந்நாளைய சமுதாய அமைப்புத்தான் எந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்துமதம் வற்புறுத்தவில்லை.
ஆகவே வெறுப்பின்மீது கட்டப்பட்ட எந்தக் கட்டடமும், இந்து மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பது உறுதி.
இந்த பேதங்களை உருவாக்கியவர்கள், தீண்டாமையை உருவாக்கியவர்கள், முற்பிரிவினர்கள்தான் என்ற பொய் வாதத்தைத் தகர்க்க, அதே பிரிவினர்தான் அவற்றை ஒழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை தேசிய போராட்டக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம்.
இடைக் காலத்தில் வந்த சாதிகள், நம் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருப்பது, `நாம் நல்ல காலத்தில் வாழ்கிறோம்’ என்பதைக் காட்டுவதோடு, இந்துமதத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்து வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சாதிகள் , இந்துமதம், இந்து, துறையில், சமுதாய, நான்கு, புத்தகங்கள், சாதிகள், மட்டுந்தான், அந்த, ஈடுபட்டான், இல்லை, ஆகவே, என்றால், வேண்டும், காலத்தில், அர்த்தமுள்ள, உருவாக்கப்பட்டனர், ஆன்மிகத், கொண்டவர்களும், இன்று, மனப்பான்மை, தாங்கள், நோக்கம், சாதிப், ஒருவர், தொழில், உருவாக்கியவர்கள், உருவாக்கிய, என்பதும், தோன்றிய, முடியாது, இன்றைய, `சூத்திரன்&, என்பதை, நாம், உடல், அரசியலில், சிறந்த, பிரிவினர், பிரிவுகள், பிரிவைச், கொண்ட, மட்டும், ஏற்றுக், அவரவர், பொருள், அமைப்பின்படி, இருக்கிறார்