பொன்னியின் செல்வன் - 5.34. "போய் விடுங்கள்!"
அச்சமயம், "அம்மா! அம்மா! எங்கே இருக்கிறீர்கள்?" என்ற குரல் கேட்டது. அது சந்திரமதியின் குரல்.
"இங்கேதானடி இருக்கிறேன். அல்லிக் குளத்தின் அருகில் இருக்கிறேன்! சீக்கிரம் வா!" என்றது மணிமேகலையின் குரல்.
காலடிச் சத்தங்கள் கேட்டன. காலில் அணியும் நூபுரங்களின் இனிய ஒலிகளும் கேட்டன.
அல்லிக் குளம் என்று மணிமேகலை கூறியது அந்தப் பூங்காவனத்தின் மத்தியில் செய்குன்றத்தின் அருகில் இருந்த சிறிய பளிங்குக்கல் தடாகத்தைத்தான். அந்தக் குளம் அல்லிப் பூவின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சில அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் இருந்தன. அச்சமயம் சில மலர்களும் இருந்தன. இந்த அல்லிக் குளத்தை முன்னமே வந்தியத்தேவன் பார்த்திருந்தான். அதன் அருகிலே தான் அவனும் விழுந்திருக்க வேண்டும்! நல்லவேளையாக, அப்பெண்கள் இருவரும் அவனைக் கவனிக்கவில்லை. பகல்வேளையாக இருந்து அவர்கள் அவன் விழுந்ததைப் பார்த்திருந்தால் கலகலவென்று சிரித்து அவனுடைய மானம் போகும்படி செய்திருப்பார்கள். இப்போது மணிமேகலையின் துணைக்குச் சந்திரமதி வந்து விட்டபடியால், அந்தப் பெண்களுக்குத் தெரியாமலேயே அவன் அங்கிருந்து நழுவிப் போய் விடலாம்.
இதற்கிடையில் அந்தப் பெண்களின் பேச்சு அவன் காதில் விழுந்தது.
"அம்மா! எதைக் கண்டு பயந்தீர்கள்? ஏன் அப்படிக் கூச்சலிட்டீர்கள்?" என்றாள் சந்திரமதி.
"அடியே! அந்த மதில் சுவரைப் பாரடி! அதன் மேலே ஏதோ தெரிந்தது. தலையில் சடையும், முகத்தில் தாடியும் மீசையுமாக ஓர் உருவம் தெரிந்தது. அதன் கழுத்தில் - சொல்லப் பயமாயிருக்கிறதடி!- மண்டை ஓட்டு மாலை ஒன்று அணிந்திருந்தது! நான் கூச்சலிட்டதும் அது மறைந்து விட்டது!" என்றாள் மணிமேகலை.
"நன்றாயிருக்கிறது, இளவரசி! தங்களுடைய மனப் பிராந்திதான் அது! பேயும் இல்லை, பிசாசும் இல்லை! இவ்வளவு உயரமான மதில் சுவரின் மேல் யாரும் வந்து உட்கார்ந்திருக்கவும் முடியாது" என்றாள் சந்திரமதி.
"இல்லையடி! என் மனப் பிராந்தியில் அப்படிப் பேய் பிசாசு ஒன்றும் தோன்றுவது வழக்கமில்லை..."
"ஆமாம்! மனிதனை யொத்த வடிவழகரின் முகந்தான் உங்கள் கனவிலும் நனவிலும் தோன்றுவது வழக்கம்!"
"சீச்சீ! இப்போதுகூட உனக்கு விளையாட்டா?"
"பின் எப்போது விளையாடுவது? முன்மாலை நேரத்தில் பூங்காவனத்தில் அல்லிக் குளத்தினருகே வந்து காத்திருக்கிறீர்கள். முல்லை மலர்களின் மணம் கம்மென்று வீசுகிறது... ஆனால், பாவம், என்ன செய்கிறது? தாங்கள் வல்லத்து இளவரசரை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மீசையும் தாடியும் உள்ள பிசாசு வந்து சேருகிறது!"
"போதும் போதாதற்கு நீயும் வந்து சேருகிறாய்!"
"என்னைப் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பிசாசு பயந்து ஓடிவிட்டதோ, என்னமோ? கடம்பூர் அரண்மனைப் பணிப் பெண் சந்திரமதியைக் கண்டால் பேய் பிசாசுகள், பூதங்கள், வேதாளங்கள் எல்லாம் பயந்து ஓடும் என்பது உலகப் பிரசித்தியாயிற்றே!"
"சந்திரமதி உன் வேடிக்கைப் பேச்செல்லாம் இப்போது வேண்டாம். உண்மையாகவே நான் மதில் சுவரின் மேல் கோரமான ஓர் உருவத்தைப் பார்த்தேன். நீ நம்பாவிட்டால் வேண்டாம்! நீ போன காரியம் என்ன ஆயிற்று என்று சொல்லு!"
"போன காரியம் பலிக்கவில்லை, இளவரசி!"
"ஏன்? ஏன்?"
"காஞ்சி இளவரசரும், கடம்பூர் இளவரசருந்தான் அங்கே கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வல்லத்து இளவரசரைக் காணவே காணோம்."
"ஒரு வேளை அவரையும் எங்கேயாவது அனுப்பி வைத்து விட்டார்களா, என்ன?"
"அப்படியும் தெரியவில்லை. தங்கள் தந்தையும் பல்லவருந்தான் மலையமான் அரசரை எதிர்கொள்ளப் போயிருக்கிறார்கள். இடும்பன்காரியைக் கேட்டேன். இன்று சாயங்காலம் கரிகாலர், வல்லத்தரசர் மீது ஏதோ எரிந்து விழுந்தாராம்!..."
"அவருக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது, எல்லார் பேரிலும் எரிந்து விழுகிறார், பிறகு?..."
"'இன்றைக்கு இனிமேல் என் முகத்தில் விழிக்காதே! நாளைப் பொழுது விடிந்த பிறகு வா!' என்று சொல்லி அனுப்பி விட்டாராம்!"
"பின்னர் அவர் எங்கே போயிருப்பார்?" என்றாள் மணிமேகலை.
"இந்த மாளிகை மதில் சுவருக்குள்ளேதான் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் சொன்னேன்; ஒருவேளை அவரே பிசாசு போல் வேஷம் போட்டுக் கொண்டு தங்களைப் பயமுறுத்தினாரோ என்று."
"இல்லை; இந்த அரண்மனையில் வேஷக்காரர்கள் பலர் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் வேஷம் போட்டு ஏமாற்றுகிறவர் அல்ல..."
"இப்படித்தான் நம்மைப் போன்ற அபலைப் பெண்கள் புருஷர்களை நம்பி ஏமாந்து போவது வழக்கம்."
"அப்படியேயிருக்கட்டும். நீ மறுபடியும் போய்த் தேடிப் பார்! அரண்மனை மதிளுக்குள்ளேதானே எங்கேயாவது இருக்க வேண்டும்? இடும்பன் காரியையும் தேடிப் பார்க்கச் சொல்லு!"
"இளவரசி! அந்த இடும்பன் காரியைக் கண்டால் எனக்குப் பிடிக்கவேயில்லை, விழித்து விழித்துப் பார்க்கிறான். அவனிடம் எனக்குப் பயமாகக்கூட இருக்கிறது..."
"பேய் பிசாசுக்குப் பயப்படாதவள் இடும்பன்காரிக்குப் பயப்படுகிறாயே? போனால் போகட்டும். அவனிடம் ஒன்றும் சொல்லமலிருப்பதே நல்லது. நீயே இன்னொரு தடவை போய்த் தேடிப் பார்த்துவிட்டு வா!"
"அதுவரையில்..."
"நான் இங்கேயே இருக்கிறேன்..."
"மறுபடியும் அந்தப் பிசாசு இங்கு வந்தால்?..."
"உன் பெயரைச் சொல்லி விரட்டியடித்து விடுகிறேன்!"
சந்திரமதி அங்கிருந்து போவதற்கு அறிகுறியான நூபுரத்தின் மெல்லிய ஒலி கேட்டது.
மேற்கூறிய சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றின. சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்த 'பிசாசு' யாராயிருக்கும் என்று யோசித்தான். ஆழ்வார்க்கடியான் காளாமுகனுடைய வேடம் தரித்து வந்து தன்னைக் காப்பாற்றியது அவன் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அந்த வீர வைஷ்ணவனாகவே இருக்குமோ? தஞ்சாவூரிலிருந்து தனக்கு ஏதேனும் முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறானோ? இங்குள்ளவர்களுக்கு அடையாளம் தெரியாமலிருக்க அப்படி வேஷம் தரித்து வந்திருக்கிறானோ?
மணிமேகலை தன்னைப் பார்க்க இவ்வளவு ஆவல் கொண்டிருப்பதின் காரணம் என்ன? எதற்காகத் தோழியை அனுப்பித் தேடி அழைத்துக்கொண்டு வரச் சொல்கிறாள்? அவன் விஷயத்தில் மணிமேகலையின் மனோ நிலை அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அதனாலேயே அவள் அருகில் அதிகமாக நெருங்காமலிருந்து வந்தான். கந்தமாறனுடைய பகைமையை இன்னும் தூண்டிவிடாமலிருக்கவும் விரும்பினான். ஆயினும், இப்போது நந்தவனத்தில் வந்து தனிமையாக உட்கார்ந்துகொண்டு அவனை அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். ஏதோ முக்கியமான காரியம் இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலான காரியத்தில் இறங்கியிருக்க மாட்டாள். பாவம்! அவளுக்கும் ஏதாவது சங்கடம் நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? அல்லது நந்தினி அவளிடம் ஏதாவது செய்தி சொல்லி அனுப்பியிருக்கலாம். கடவுளே! இங்கே, இந்தக் கடம்பூர் அரண்மனையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மனத்தில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று முன்னால் மணிமேகலை கூறியது ரொம்ப உண்மை. எல்லாருமே வஞ்சக வேஷதாரிகள். இவர்களுக்கு மத்தியில் இந்தப் பேதைப் பெண் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறாள். பழுவூர் ராணி இந்தப் பெண்ணை எந்தத் தீய காரியத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்களோ, தெரியவில்லை. ஆம்; மணிமேகலையின் மனத்தில் ஏதோ சந்தேகம் தோன்றியிருக்கவேண்டும். ஏதோ ஓர் அபாயத்தை அவள் எதிர்பார்த்திருக்கவேண்டும். ஆகையினாலேயே அவள் தன்னுடைய உதவியை நாடுகிறாள்.
அந்தக் கள்ளங் கபடமற்ற பேதைப் பெண் முன்னொரு சமயம் தனக்குச் செய்த உதவியை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்துக்கொண்டான். அவளுக்கு உண்மையாகவே ஏதேனும் துன்பம் நேர்ந்திருந்து தன்னுடைய உதவியைக் கோருவதாயிருந்தால், அதை மறுப்பது நன்றி கொன்ற பாதகம். எப்படியிருந்தாலும் உண்மையைத் தெரிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சந்திரமதி போய்விட்டாள்; மணிமேகலை தனியாக இருக்கிறாள். யார் கண்டது? அவளுடைய உதவி அவனுக்கு மறுபடியும் தேவையாயிருக்கக் கூடும். அவளுடைய சகாயத்தினால் இந்தச் சூழ்ச்சி குடிகொண்ட அரண்மனையை விட்டுப்போக முடிந்தால்கூட நல்லதுதான். எதற்கும் அவளிடம் இச்சமயம் போய்க் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
அல்லிக் குளத்தின் கரையிலிருந்த பளிங்குக்கல் மேடையில் மணிமேகலை உட்கார்ந்திருந்தாள். மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர் விட்டு ஒளிர்ந்தது போல் அல்லிக் குளத்திலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்த இலைகளுக்கு மத்தியில் மலர்கள் தலை தூக்கி நின்றன. சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளில், இரவில் பூக்கும் அம்மலர்களின் வெண்மை நிறம் நன்கு எடுத்துக் காட்டப்பட்டது. அல்லிக் குளத்துக்கு அப்பால் முல்லைப் புதர்களில் பாதி மலர்ந்த பூக்களும் மொட்டுக்களும் நீல நிற விதானத்தில் முத்துக்களைப் பதித்ததுபோல் காட்சி தந்தன.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மிகச் சமீபத்தில் வந்திருந்த உருவத்தைக் கண்டு அவசரமாக எழுந்தபோது கால் தடுமாறிப் பின்னாலிருந்த குளத்தில் விழப் போனாள்.
"ராஜகுமாரி! நான்தான்!" என்று கூறிக் கொண்டே வந்தியத்தேவன் மணிமேகலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இயற்கையாக ஏற்பட்ட கூச்சத்தினால் அவனுடைய கரங்களைப் பற்றி அப்பால் தள்ளிவிட்டுத் தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அதற்கு வேண்டிய பலம் அப்போது அவளுடைய கரங்களில் இல்லை! அந்த முயற்சியில் மறுபடியும் பின்னாலேதான் சாயும்படி நேர்ந்தது.
வந்தியத்தேவன் இன்னும் கெட்டியாக அவளைப் பிடித்துத் தாங்கி முன் பக்கமாகக் கொண்டு வந்தான்.
மணிமேகலை ஒரு பெருமுயற்சி செய்து தன்னைச் சுதாரித்துக் கொண்டு, "விடுங்கள்! என்னைத் தொடாதீர்கள்!" என்று கோபக்குரலில் கூறினாள்.
வந்தியத்தேவன் அவளை விட்டு விட்டு, "ராஜகுமாரி! மன்னிக்க வேண்டும்!" என்றான்.
மணிமேகலை இன்னமும் பட படப்பு நீங்காத தழுதழுத்த குரலில், "தங்களை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?" என்று கேட்டாள்.
"திடீரென்று வந்து தங்களைத் திடுக்கிடச் செய்ததற்காகத்தான்!"
"வந்ததுதான் வந்தீர்கள்! எதற்காக என்னைத் தொட்டுப் பிடித்துக்கொள்ளவேண்டும்?" என்று மணிமேகலை கேட்ட குரலில், அவள் தன்னை நன்றாகச் சுதாரித்துக் கொண்டு விட்டாள் என்பது வெளியாயிற்று.
"தாங்கள் குளத்தில் விழாமல் பிடித்துக் கொண்டேன்!"
"அழகாயிருக்கிறது! அன்று ஏரியில் விழுந்து நான் முழுகித் தத்தளித்தபோது இவ்வளவு பரிவு காட்டவில்லையே? இந்த முழங்கால் அளவு தண்ணீர் உள்ள குளத்தில் நான் விழாமல் காப்பாற்றுவதற்கு வந்து விட்டீர்களே?"
"அது என் குற்றந்தான்!"
"நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை; குற்றமெல்லாம் என்னுடையது."
"அது எப்படி? தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை. என் பேரில் ஏதோ கோபத்தினால் இவ்விதமாகச் சொல்லுகிறீர்கள்!"
"முன்னொரு நாள் தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள்ளிருந்து திடீரென்று நான் இருந்த அறையில் புகுந்தீர்கள். அன்றைக்கும் என்னைத் திடுக்கிட வைத்தீர்கள். அப்போதே நான் கூக்குரலிட்டுத் தங்களை என் தந்தையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்!"
"அன்றைக்கு என்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினீர்கள். அதை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்."
"அதற்குப் பதில் தாங்கள் நன்றி செலுத்திய விதத்தை நானும் மறக்கமாட்டேன். நன்றிகெட்டவர்களிலே தங்களைப் போல நான் பார்த்ததே இல்லை..."
"இளவரசி! இது பெரிய அபாண்டம்! எந்த விதத்தில் நான் நன்றி கெட்டவன்? சொல்லுங்கள்!"
"தங்களை யாரோ கொலைகாரர்கள் துரத்தி வருவதாகப் பொய் சொன்னீர்கள். நான் வேட்டை மண்டபத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே திருடனைப் போல் ஓடி விட்டீர்கள்!"
"திருடனைப் போல் ஓடி விட்டேன் என்றா சொன்னீர்கள்?"
"திருடனைப் போல் என்று கூறியது தவறு; திருடனே தான்!"
"இளவரசி அன்று நான் எவ்வளவு இக்கட்டான நிலைமையிலிருந்தேன் என்பது தங்களுக்குத் தெரியாது..."
"தெரியாதவர்களுக்குத் தாங்கள் தெரியப்படுத்தியிருக்கலாமே? யார் வேண்டாம் என்று தடுத்தார்கள்?"
"தங்கள் தோழி சந்திரமதிதான். தாங்கள் வேட்டை மண்டபத்துக்குள் சென்றதும் சந்திரமதி இன்னொரு வாசல் வழியாக வந்துவிட்டாள். அவள் கண்களில் படாமல் இருப்பதற்காக யாழ்க் களஞ்சியத்தில் மறைந்து கொண்டேன்."
"பிறகு அங்கிருந்து மாயமாய் மறைந்து போய் விட்டீர்கள்!"
"இல்லை; மச்சுப்படி ஏறி, மாடங்களை யெல்லாம் தாண்டி, மதில் சுவர் மேலும் ஏறிக் குதித்துத்தான் போனேன். இளவரசி! அன்று என்னை யாராவது கண்டுபிடித்திருந்தால், நான் ஏற்றுக் கொண்டிருந்த காரியமும் கெட்டிருக்கும்; தங்களுக்கும் வசைச் சொல் ஏற்பட்டிருக்கும்..."
"இந்தப் பேதைப் பெண்ணைப் பற்றித் தங்களுக்கு எவ்வளவு கவலை?"
"உண்மையாகவே கவலைதான்!"
"அப்படியானால், இங்கே தாங்கள் திரும்பி வந்து இத்தனை நாள் ஆயிற்றே? சொல்லாமல் ஓடிப்போன காரணத்தைச் சொல்லியிருக்கலாமே?..."
"அதற்குச் சந்தர்ப்பத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..."
"ஏன் ஐயா, வெறும் வார்த்தை? நான் இருக்கும் திக்கையே தாங்கள் திரும்பிப் பார்ப்பது கிடையாதே?"
"சகோதரி!..."
"நான் தங்கள் சகோதரி அல்ல!"
"தாங்கள் என் சிநேகிதன் கந்தமாறனுடைய சகோதரி; ஆகையால் எனக்கும் சகோதரி."
"கந்தமாறன் என்னுடைய சகோதரன் அல்ல; தங்களுக்கு அவன் சிநேகிதனும் அல்ல. நம் இருவருக்கும் அவன் கொடிய பகைவன்..."
"இளவரசி! அதுதான் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! சில நாள் முன் வரையில் கந்தமாறன் என் உயிருக்குயிரான நண்பனாக இருந்தான். இப்போது அடியோடு மாறிப் போயிருக்கிறான். பார்த்திபேந்திரன் எப்போது என் தலைக்கு உலை வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆதித்த கரிகாலரோ நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுகிறார். இந்த நிமிஷம் அன்பாகப் பேசுகிறார்; அடுத்த நிமிஷம் எரிந்து விழுகிறார். எப்போது என்ன ஆபத்து வருமோ என்று எதிர்பார்த்துக் காலங் கழிக்கிறேன். இந்த நிலைமையில் என்னுடைய நன்றியைச் செலுத்துவதற்காகத் தங்களை நான் தேடிவந்தால்.."
"ஐயா! தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தாங்கள் இவ்வளவு ஊக்கமாயிருப்பது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...!"
"இளவரசி என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் உயிரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தங்களுக்கு என்னால் தீங்கு எதுவும் நேராமலிருக்க வேண்டும் என்று தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."
"கவலைப்பட்டு உருகிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆண் மக்கள் எல்லாருமே வஞ்சகர்கள் என்று சந்திரமதி சொல்லுவாள். அது உண்மை என்று இப்போதுதான் நிச்சயமாகிறது."
"யார் என்ன சொன்னாலும் சரிதான். என் உயிர் உள்ள வரையில் தங்களை நான் மறக்கமாட்டேன்! தாங்கள் எனக்குச் செய்த உதவியையும் மறக்கமாட்டேன்!"
மணிமேகலை சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "ஐயா இப்போது தாங்கள் சொன்னதை இன்னொரு தடவை சொல்லுங்கள்?" என்றாள்.
"ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொல்கிறேன். என் உயிர் உள்ளவரையில் தாங்கள் செய்த உதவியை மறக்கமாட்டேன்!" என்று வந்தியத்தேவன் உறுதியுடன் கூறினான்.
"ஆயிரம் தடவை சொன்னால் மட்டும் என்ன பயன்? அதை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும் அல்லவா?"
"எந்த விதத்தில் முயற்சி எடுப்பது? சொல்லுங்கள் இளவரசி!"
"தங்கள் உயிர் உள்ள வரையிலேதான் எனக்கு நன்றி செலுத்துவீர்கள்? ஆகையால் தங்கள் உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுக்காக இல்லாவிட்டாலும், எனக்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!"
"இளவரசி! இது என்ன?..."
"ஐயா! உண்மையைச் சொல்லுங்கள்! சற்று முன்னால் நானும் என் தோழியும் பேசிக் கொண்டிருந்ததைத் தாங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?"
"மன்னிக்க வேண்டும், இளவரசி! 'ஐயோ பிசாசு!' என்று தாங்கள் கூவியதைக் கேட்டு ஓடிவந்தேன். அதற்குள் தங்கள் தோழி சந்திரமதி வந்துவிட்டாள். உங்களுடைய பேச்சைக் கேட்கும்படி நேர்ந்துவிட்டது."
"தங்களை எப்படியாவது தேடிப்பிடித்து அழைத்து வரும்படி அவளை நான் அனுப்பியது தெரியும் அல்லவா?"
"காதில் விழுந்தது. அதனாலேதான் தங்களை அணுகி வந்தேன்..."
"இல்லாவிடில் என் அருகிலும் வந்திருக்க மாட்டீர்கள். அடடா என்ன கரிசனம்? போனால் போகட்டும். தாங்கள் எவ்வளவு கல் நெஞ்சராயிருந்தாலும் என் மனம் கேட்கவில்லை. தங்களுக்கு ஆபத்து என்றால் நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை."
"இளவரசி! என்னுடைய ஆபத்தான நிலைமை எனக்குத் தெரிந்தேயிருக்கிறது. எனக்குத் தெரியாத புதிய ஆபத்து ஏதேனும் வரப்போகிறதா?"
"ஐயா! இந்த அரண்மனையை விட்டுத் தாங்கள் உடனே போய்விடுங்கள்!"
"என்னைப் புறங்காட்டி ஓடச் சொல்கிறீர்களா?"
"போர்க்களத்தில் புறங்காட்டி ஓடக் கூடாது. சதிகாரர்களிடமிருந்து தப்பிச் செல்வதில் குற்றம் என்ன?"
"யார் சதிகாரர்கள்?"
"வேறு யார்? கந்தமாறனும் பார்த்திபேந்திரனுந்தான்."
"அவர்களுக்குப் பயந்து நான் இந்த அரண்மனையை விட்டு ஓட முடியாது."
"என் தமையனால் தங்களுக்குத் தீங்கு நேர்வதை அறிந்து, நான் அதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது."
"இளவரசி! கந்தமாறனுடைய காரியங்களுக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பு ஆவீர்கள்?"
"என் காரணமாகவே அவனும் பார்த்திபேந்திரனும் தங்களுக்குத் தீங்கு இழைக்கப் பார்க்கிறார்கள்."
"தங்களுக்காக நான் துன்பம் அடைந்தால் அது என் பாக்கியம். தாங்கள் செய்த உதவிக்குப் பிரதி செய்ததாக எண்ணிக் கொள்வேன்..."
"நந்தனி தேவி கூறியது சரிதான்!"
"ஆகா! பழுவூர் ராணி தங்களிடம் என்ன கூறினாள்!"
"உங்களிடம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்படிச் சொன்னால், கேட்கமாட்டீர்கள். வேறு யுக்தி செய்ய வேண்டும் என்றார். ஐயா! தயவுசெய்து தாங்கள் என்னுடன் வாருங்கள். பழுவூர் ராணி தங்களை ஏதோ ஓர் அவசர காரியமாகப் பார்க்க வேண்டுமாம்."
"அந்த அவசரமான காரியம் என்னவென்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா?"
"தெரியும்; பழுவேட்டரையர் கொள்ளிடத்தைத் தாண்டும் போது படகு கவிழ்ந்து போய்விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..."
"நானும் கேள்விப்பட்டேன்!"
"தாங்கள் உடனே போய் அதைப்பற்றியே உண்மையைத் தெரிந்துகொண்டு வரவேண்டுமாம். அவ்விதம் தங்களிடம் பழுவூர் ராணி நேரில் கேட்டுக் கொள்ளப் போகிறார்."
வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதையெல்லாம் என்னிடம் முன்னால் கூற வேண்டாம் என்று பழுவூர் ராணி எச்சரிக்கவில்லையா?" என்றான்.
"ஆமாம்!"
"பின் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொன்னீர்கள்?"
"என் மனம் குழம்பியிருப்பதுதான் காரணம். ஐயா! சில நாளைக்கு முன்னால் வரையில் நான் கள்ளங் கபடமறியாத பெண்ணாயிருந்தேன். யாரைப் பற்றியும் எந்தவிதமான சந்தேகமும் கொண்டதில்லை. யாரைப் பற்றியேனும் என் தோழிகள் குறை சொன்னாலும் நம்புவதில்லை. இப்போது எல்லாரையும் சந்தேகிக்கிறேன்; எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்."
"என் முகத்தில் விழித்த நேரத்தினால் ஏற்பட்ட விபரீதம் போலிருக்கிறது."
"ஒரு விதத்தில் அது உண்மைதான்! பழுவூர் இளையராணி தங்களை அழைத்து வரும்படி எனக்குச் சொல்லி அனுப்பினார். அவருடன் பேசும்போது ஒரு சந்தேகமும் தோன்றவில்லை. எல்லாம் சரியென்று தோன்றியது.... இப்பால் வந்ததும் அவர் பேரிலேயே சந்தேகம் ஏற்படுகிறது."
"என்ன சந்தேகம், இளவரசி? நந்தினிதேவியின் பேரில் தங்களுக்கு என்ன சந்தேகம்?"
"அவரும் சேர்ந்து தங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுகிறாரோ என்றுதான்."
"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது? அவர் எனக்கு என்ன தீங்கு செய்யமுடியும்?"
"அதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் யோசித்துப் பார்த்தால் சந்தேகம் உண்டாக்குகின்றன. அடிக்கடி ஒரு நீண்ட வாளைக் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்."
"ஒரு பெண்ணின் கையில் உள்ள வாளைக் கண்டு நான் அஞ்சுவதில்லை. அதைக்காட்டிலும்..."
"முகத்திலுள்ள கண்களாகிற வாள்களுக்கு அஞ்சுவீர்கள். எல்லாரும் சொல்லும் கதைதான் இது. ஐயா! நந்தினி தேவியின் வாளுக்கு மட்டும் தங்களை நான் பயப்படச் சொல்லவில்லை. முதன் முதலில் தாங்கள் வேட்டை மண்டபத்திலிருந்து நான் இருந்த அறைக்குள் வந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..."
"நன்றாக ஞாபகம் இருக்கிறது..."
"கொலைகாரர்கள் சிலர் தங்களைத் தொடர்ந்து வந்ததாகச் சொன்னீர்கள். முதலில் அதை நான் நம்பவில்லை. பிறகு வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்த்தேன். அங்குள்ள மிருகங்களுக்குப் பின்னால் சிலர் மறைந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் தங்களைக் கொல்ல வந்தவர்களா, அல்லது தங்களுடனேயே வந்தவர்களா என்று அப்போது என்னால் நிச்சயிக்க முடியவில்லை. அவர்களைப் பற்றிச் சொன்னால், தங்களைப் பற்றியும் சொல்ல வேண்டியதாகும் அல்லவா?"
"எனக்குத் தாங்கள் செய்த பேருதவி எவ்வளவு என்பதை இப்போதுதான் நன்கு உணர்ந்துகொள்கிறேன்."
"அதற்காக நான் அந்த விஷயத்தை இப்போது சொல்லவில்லை. சற்று முன்னால் நந்தினி தேவி தங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார். உடனே, ஏதோ அவரிடம் கேட்பதற்காகத் திரும்பிப் போனேன். கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தார். உள்ளே, வேட்டை மண்டபத்திலிருந்து பேச்சுக் குரல்கள் இலேசாகக் கேட்டன. ஐயா! என் சந்தேகத்தைத் தங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். வேட்டை மண்டபத்தில் யாரோ ஆள்கள் வந்து ஒளிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுக்கும் பழுவூர் ராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கிறேன்."
வந்தியத்தேவன் இப்போதுதான் நிலைமையின் முக்கியத்தை நன்கு உணர்ந்தான். இன்று ஏதோ விபரீத சம்பவம் நிகழப்போகிறது என்பதாக அவன் உள்ளுணர்ச்சி அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தது. மணிமேகலை கூறிய செய்திகள் அவன் உள்ளுணர்ச்சியை உறுதிப்படுத்தின.
"இளவரசி! எனக்குத் தாங்கள் ஓர் உதவி அவசியம் செய்யவேண்டும்!"
"என்னவென்று சொல்லுங்கள்!"
"வேட்டை மண்டபத்துக்கு வெளியிலிருந்து சுரங்கப் பாதை மூலமாக வரும் வழி ஒன்றிருக்கிறது. இப்போது நந்தினி தேவி இருக்கும் அறை வழியாகப் போவதற்கும் ஒரு வாசல் இருக்கிறது. இவற்றைத் தவிர மூன்றாவது வழி ஒன்று இருக்கிறதல்லவா?"
"ஆமாம்; வேலைக்காரர்கள் போவதற்கென்று ஒரு வழி இருக்கிறது. அரண்மனைக்குப் புதிதாக வரும் விருந்தாளிகளை அந்த வழியாகத்தான் என் தந்தை அழைத்துப் போவது வழக்கம்..."
"இளவரசி! அந்த வழியாக என்னை இப்போதே வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போங்கள்!"
"எதற்காக?"
"அங்கே வந்து ஒளிந்திருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன நோக்கத்துடனே வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்குத் தான்..."
"தங்களை அபாயத்திலிருந்து தப்புவிக்க வந்தேன். அபாயத்துக்கே இட்டுச் செல்லும்படி கேட்கிறீர்கள்."
"என் இடையில் எப்போதும் கத்தி இருக்கிறது. இளவரசி! தெரியாமல் வரும் அபாயத்தைக் காட்டிலும் தெரிந்த அபாயத்தை எதிர்ப்பது எளிது. அபாயத்தை நாமே எதிர் கொண்டு போவது இன்னும் மேலானது."
"ஒரு நிபந்தனைக்குச் சம்மதித்தால் தங்களை வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போவேன்."
"அது என்ன?"
"நானும் தங்களுடன் வருவேன்; என் இடையிலும் ஒரு சிறிய கத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று மணிமேகலை தன்னுடைய கத்தியை எடுத்துக் காட்டினாள்.
வந்தியத்தேவன் அதற்குச் சம்மதம் கொடுத்தான்.
"அப்படியானால் சீக்கிரம் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். சந்திரமதி இங்கே என்னைத் தேடி வருவதற்குள் போய்விட வேண்டும்" என்றாள்.
நந்தவனத்தைக் கடந்து வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்துச் சென்றாள். பிறகு, மாளிகையின் ஓரமாகச் சுவர்களின் கரிய நிழல் அடர்ந்திருந்த இடங்களின் வழியாக அழைத்துச் சென்றாள். பிறகு மாளிகையில் புகுந்து ஜன சஞ்சாரம் இல்லாத தாழ்வாரங்கள், நடைபாதைகள் வழியாக அழைத்துச் சென்றாள். பின்னர், கதவு சாத்தப்பட்டிருந்த ஒரு வாசற்படியின் அருகில் வந்தாள். அங்கேயே வந்தியத்தேவனை நிற்கச் செய்துவிட்டு விரைந்து சென்று ஒரு கை விளக்கை எடுத்து வந்தாள். கதவைத் திறந்து உள்ளே விளக்கைத் தூக்கிக் காட்டியபோது வரிசையாகப் படிக்கட்டுக்கள் அமைந்த குறுகிய நடைபாதை காணப்பட்டது. இருவரும் அப்படிகளில் இறங்கிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு முன்னால், சென்ற மணிமேகலை சட்டென்று நின்று, மெல்லிய குரலில், "நில்லுங்கள்! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறது, தங்களுக்குக் கேட்கிறதா?" என்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொன்னியின் செல்வன் - 5.34. "போய் விடுங்கள்!", ", நான், தாங்கள், என்ன, இளவரசி, மணிமேகலை, தங்களை, வந்து, வந்தியத்தேவன், வேண்டும், அவன், சந்திரமதி, வேட்டை, இப்போது, பிசாசு, அந்த, அல்லிக், பழுவூர், பிறகு, என்றாள், தங்களுக்குத், ராணி, தங்கள், இல்லை, போய், மணிமேகலையின், முன்னால், கொண்டு, சந்தேகம், யார், தங்களுக்கு, தீங்கு, இவ்வளவு, எனக்குத், விட்டு, அவள், செய்த, குரல், சொல்லுங்கள், இருக்கிறது, சொல்லி, அந்தப், என்னைப், அல்லவா, போல், உள்ள, மதில், அவர், மறக்கமாட்டேன், தான், கூறியது, தெரியும், அருகில், சொன்னீர்கள், அல்ல, எவ்வளவு, குரலில், முடியாது, வேண்டாம், அவளுடைய, சகோதரி, என்பது, கொண்டிருக்க, விடுங்கள், வழியாக, நந்தினி, எதற்காக, நன்றி, என்னைத், ஏதேனும், மனத்தில், காப்பாற்றிக், காரியம், தடவை, நானும், பெண், உண்மையைத், பேசிக், உண்மையாகவே, சிறிது, உயிர், இப்போதுதான், எங்கேயாவது, சொன்னால், மறுபடியும், தன்னுடைய, அபாயத்தை, உதவியை, கொண்டிருந்த, கேட்டுக், என்னை, பேதைப், இங்கே, சற்று, இன்னும், கந்தமாறனுடைய, இந்தப், என்னுடைய, இன்னொரு, தங்களைப், பற்றியும், வேஷம், என்னால், எரிந்து, போவது, கடம்பூர், வரையில், நிமிஷம், ஆபத்து, தேடிப், திருடனைப், வரும்படி, மேல், செய்ய, நாள், திடீரென்று, ஒன்றும், தெரியவில்லை, இந்தச், சிறிய, என்னிடம், இருக்கிறேன், அம்மா, பற்றி, அல்லது, மன்னிக்க, மண்டபத்துக்கு, அழைத்துச், வந்தாள், சென்றாள், அன்று, பொன்னியின், செல்வன், பார்த்துவிட்டு, அழைத்துப், அவளை, ஏதாவது, பின், வரும், ஒன்று, சந்தேகிக்கிறேன், பிடித்துக், மறைந்து, சுவரின், அழைத்து, முகத்தில், கண்டு, பேய், ஆமாம், அரண்மனையை, பயந்து, முதலில், எப்போது, வழக்கம், அங்கிருந்து, நன்கு, விதத்தில், திரும்பிப், மத்தியில், குளத்தில், காலடிச், கேட்டன, தேவி, இருந்த, உடனே, வருவதற்குள், எந்த, பேரில், தோழி, எதுவும், குற்றம், அபாயத்திலிருந்து, போய்ப், கொலைகாரர்கள், சொல்லிக், விட்டீர்கள், யாரோ, செய்யவில்லை, மட்டும், போலிருக்கிறது, அனுப்பினார், தோன்றியது, சொல்ல, சந்தேகமும், யாரைப், புறங்காட்டி, வேறு, தங்களிடம், வாருங்கள், வாளைக், கையில், உள்ளே, கத்தி, வந்தியத்தேவனை, சென்ற, கதவைத், வந்தவர்களா, சொல்லவில்லை, மண்டபத்திலிருந்து, சிலர், முடியவில்லை, மனம், ஆகையால், கந்தமாறன், தங்களைக், கவலைப்படவில்லை, இருக்கும், அதற்குச், வாசல், வந்துவிட்டாள், போனேன், அப்படியானால், கொண்டிருக்கிறேன், சொன்னாலும், எனக்கு, தங்களுக்காக, கொள்ளுங்கள், வந்தேன், முயற்சி, கொண்டேன், சரிதான், எனக்குச், ஆயிரம், மண்டபத்துக்குள், முக்கியமான, தெரிந்தது, விழுந்தது, தாடியும், மனப், தோன்றுவது, காதில், அவனுடைய, கொடிகளும், இருந்தன, அவனும், இருவரும், பாவம், வல்லத்து, அங்கே, கொண்டிருக்கிறார்கள், வேளை, அனுப்பி, சொல்லு, பார்த்தேன், எதிர்பார்த்துக், என்னமோ, கண்டால், எல்லாம், அந்தக், பளிங்குக்கல், நம்மைக், இருக்க, ஆதித்த, கரிகாலர், கொண்டிருக்கிறார், இப்படி, இங்கு, அமரர், கல்கியின், விரைந்து, உள்ளத்தில், எண்ணங்கள், மரத்தின், கேட்டது, குளத்தின், சீக்கிரம், குளம், இருக்கிறீர்கள், எங்கே, வேர், எடுக்க, கொண்டான், அச்சமயம், இன்று, விழுகிறார், எடுத்துக், சூழ்ந்திருந்த, பார்த்துக், பின்னால், சத்தம், கேட்டு, உதவி, கள்ளங், முன்னொரு, துன்பம், தெரிந்து, பார்த்தாள், ராஜகுமாரி, சுதாரித்துக், கூறினாள், என்றான், தங்களைத், முன், அப்போது, கொண்டே, ஏற்பட்ட, தன்னை, கொள்ளப், எல்லாருமே, உண்மை, போனால், போகட்டும், விடுகிறேன், மெல்லிய, அவனிடம், எனக்குப், பின்னர், அரண்மனையில், போய்த், இடும்பன், தரித்து, வந்தது, வந்தான், அவளிடம், செய்தி, வைத்துக், அவனுக்கு, வரச், வந்திருக்கிறானோ, பார்க்க, காரணம், தேடி, விழாமல்