அர்த்தமுள்ள இந்துமதம் - விதிப்படி பயணம்!
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
“சுவாமி!
விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன.
“விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்று விடும்” என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன.
“எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.”
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.
மண்டபம் காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, “எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.
திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.
ஞானியார் கேட்டார்:
“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”
எல்லோரும் விழித்தார்கள்.
நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.
கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
“பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!
இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”
கேள்வியாளர் கேட்டார்:
“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
ஞானியார் சொன்னார்:
“அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.”
கேள்வியார் கேட்டார்:
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ, அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.”
கேள்வியாளர் கேட்டார்:
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது? எங்கிருந்து தொடங்குகிறது?”
ஞானியார் சொன்னார்:
“சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகிறது; ஜனனத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனை பேர்?
வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது.
கோழை தோல்வியுற்றால், அது கோழைத்தனத்தால் கிடைத்தது.
ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!
வரலாற்று நதியைத் தனிமனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.
விதியே அழைத்துச் சென்றிருக்கிறது.
கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.
மாதர்களாலேயே ஆரம்பமான பிரெஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!
ஒன்று நடைபெற்ற பின்னால், `கொஞ்சம் அப்படிச் செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச் சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
கேள்வியாளர் கேட்டார்:
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.
அதைப் பள்ளம் என்று தெரியவைத்தது விதி.
விதி வாசலைத் திறந்து கொடுத்தால், மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.
விதி வாசலை மூடிவிட்டால், மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.
விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.
தந்தையைக் கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சிலநேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்றுவிடுகிறது.
நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாதவை உறுதிபெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே.
அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.
சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவத்தால் வந்த மதி.
யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.
தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது.
தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
அப்படி யாராவது இருக்கிறார்களா?”
ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.
கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.
மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானியார் அமைதியாகக் கேட்டார்:
“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”
கேள்வியாளர் அமர்ந்தார்.
ஞானியார் சொன்னார்:
“ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.
இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.
நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.
காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தைவிடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.
மதியத்தில் நம்மைவிட அது கூனிக்குறுகிக் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது.
மாலையில் அது மீண்டும் உயரமாகி விடுகிறது.
ஆனால், நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.
நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”
மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.
சபை கலைந்தது.
கேள்வியாளர் மட்டும் வெளியே நின்றுகொண்டிருந்தார்.
“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!
மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது” என்றபடி ஞானியார் நடந்தார்.
கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - விதிப்படி பயணம்! , விதி, ஞானியார், கேட்டார், சொன்னார், எல்லோரும், கேள்வியாளர், இருக்கிறது, புத்தகங்கள், விதியின், நீங்கள், இடத்தில், வெளியே, பேர், இவர்கள், விதிப்படி, வேலை, மண்டபத்தில், மட்டும், கேள்வி, அர்த்தமுள்ள, இந்துமதம், முடிவு, உங்கள், விதியை, மதியால், பிரவாகம், பயணம், அர்த்தம், கோழை, நிர்ணயிக்கப்படுகிறது, அந்த, தொடங்குகிறது, வாழ்க்கையை, வெற்றி, வீரன், ஒன்று, வந்த, மாறுவது, தொடக்கம், மாதிரி, நமது, சாமியாக, நமக்கு, மாதர்களாலேயே, சிந்திக்கிறது, பள்ளம், தந்தையைக், அழைத்துச், இல்லை, மதியை, இரண்டு, பார்த்து, நான், என்றும், வெவ்வேறு, இருந்த, என்ன, சிறந்த, வாருங்கள்&, மீண்டும், இல்லையா, வைத்தது, அப்படி, செய்வது, மனிதனின், வந்தது, எத்தனை, செய்யவில்லை, அறியாமையே, எப்போது