அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானியின் பக்குவம்
மனிதர்களுக்கு வெற்றி வரும்போது, இந்த ஆவணம் கூடவே வரும்.
அடி விழும்போது அதுவும் நாய்க்குட்டிபோல் அடங்கி விடும்.
ஆனால், ஞானியின் ஆணவம், இறைவனைச் சந்திக்கின்ற வரை நீடிக்கும்.
காரணம் அந்த ஆணவம் தன்னை அறிந்து கொண்டதற்கான தத்துவ விளக்கம்.
`மனிதர்களைப் பார்த்து இறைவன் இரண்டு முறை சிரிக்கிறான்’ என்றார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
`இது என் சொத்து! இது என் சொத்து!’ என்று பங்காளிகள் சண்டையிடும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!
`நோயாளியைப் பார்த்து மருத்துவர் கவலைப்படாதே; `நான்’ குணப்படுத்தி விடுகிறேன்’ என்று சொல்லும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!
உலகத்தில் தலைசிறந்த- முடிவான டாக்டர் ஆண்டவனே! மற்றவர்களெல்லாம் தற்காலிகமானவர்களே!
ஆனால், ஞானியின் ஆணவம் உலகத்தையே ஆட்டுவிக்கும்.
சொல்லப் போனால் அதற்குப் பெயர் ஆணவமல்ல; தெய்வீக உணர்ச்சியின் திரட்சி.
ஞானி இறைவனுடைய காலாக நிற்க விரும்புகிறான். மனிதனோ இறைவனுடைய தலையே தானென்று எண்ணுகிறான்.
`ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!’
-என்று இறைஞ்சினார், குலசேகர ஆழ்வார்.
மன்னாதி மன்னன், மகுடம் தாங்கிய தலைவன், வேங்கடத்தானின் பாதத்தில் அவன் தலை மோதிற்று.
இறை நம்பிக்கை என்பது சாதாரண மனிதனையே அரச பதவிக்கு உயர்த்தி விடுகிறது.
அரசனுக்கு பூமியிலே வைகுந்த பதவியைத் தருகிறது.
அரசு பதவி என்றால், எல்லோரையும் ஆட்டிப் படைக்கின்ற சக்தி.
இன்னும் நம் நாட்டில் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்; நிலப் பிரபுக்கள் இருக்கிறார்கள்; தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்; ஆனால், காஞ்சிபுரத்து சந்நியாசியின் காலைத்தான் உலகம் தொட்டு வணங்குகிறதே தவிர, கோடீஸ்வரனின் காலை, அவனிடம் பணம் பெற்றுக் கொண்டவன் கூடத் தொடுவதில்லை.
பெறுதலைவிட, துறத்தலுக்குரிய மரியாதை அதுதான்.
வரவு-செலவு எழுதுகின்ற செட்டியாரைவிட, துறவு கொண்டு விட்ட ஞானிக்குத்தான் மரியாதை அதிகம்.
ஆசையும் தேவையும் இல்லாதவன் எவனுமே தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
எனக்கு ஒரு பணக்காரரைத் தெரியும்.
கோடி ரூபாய்க்கு அவருக்குச் சொத்து உண்டு.
இப்பொழுது அவரிடம் போய், `கொத்தவால் சாவடியில் கத்தரிக்காய் வாங்கி ஜாம்பஜாரில், கொண்டு வந்து விற்றால் பத்து ரூபாய் கிடைக்கும்’ என்று சொல்லுங்கள்; வருவார்.
நம்மிடந்தான் கோடி இருக்கிறதே, பத்து எதற்கு என்று கருத மாட்டார்.
அக்காளை மணந்தவனுக்கு தங்கையும் தேவைப்படுகிறது.
சென்னையில் புதுநகர் வந்தால் ஆங்காங்கே புதுபங்களா சிலருக்குத் தேவைப்படுகிறது!
இவனையெல்லாம் வருமானவரி அலுவலகக் குமாஸ்தா கூட மிரட்டுவான்.
ஆசை வளர்வதும், ஆணவம் பெருகுவதும் மனிதனது அழிவுக்கே அறிகுறி.
இன்றைய அறிவு எனக்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்குமானால், நான் ஒரு துறவியாகவே இருந்திருப்பேன்.
லெளகீகத்தில் இறங்கிவிட்ட மனிதனது நிலைமைதான் என்ன?
நாய்க்குட்டி வளர்க்கிறான்; அதற்குப் பால் வேண்டுமே என்று பசு மாடு வாங்குகிறான்.
பசுவைப் பாதுகாக்க வேண்டுமே என்று வேலைக்கு ஆளை வைக்கிறான்; வேலைக்காரனைக் கண்காணிக்க வேண்டுமே என்று வீட்டுக்காரியைக் கொண்டு வருகிறான்.
வீட்டுக்காரி வந்த பின் சும்மா இருக்க முடியவில்லை; பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான். பிள்ளைகளுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசை வயப்பட்டு அலைகிறான்.
நினைத்தது கிடைக்கவில்லை என்றால் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறான்; நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால் `நான் யார் தெரியுமா?’ என்கிறான்.
ஒன்று அவலம்.
இன்னொன்று ஆணவம்.
இந்த இரண்டுமற்ற நிலையில் ஒரு மனிதனுக்குத் தேவையானது லெளகீக வாழ்விலும் ஒரு ஞானியின் பக்குவம்.
அப்படிப்பட்டவனை, `இல்லறத் துறவி’ என்பார்கள்.
`வெள்ளை வேட்டி சந்நியாசி’ என்பார்கள்.
அவன், வருவதைக் கடவுள் பெயராலே செலவு எழுதுகிறான்.
லெளகீகத்தில் இருந்து கொண்டே ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனும், எந்தக் காலத்திலும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
நமது தலைமுறையில் காந்திஜி ஒரு உதாரணம்.
அவர் நீட்டிய கையில் கொட்டிக் கொடுத்தது நாடு.
கொட்டிக் கொடுத்ததை அப்படியே குவித்துக் கொடுத்தார் நாட்டுக்கு.
தேவதாஸ் காந்திக்குக் கொடுத்தாரா, தேறாத பிள்ளைக்கு ஒதுக்கினாரா?
குடும்பத்தில் இருங்கள்.
ஞானியாகத் திகழுங்கள்.
பசி எவ்வளவோ அவ்வளவுக்கு உணவு தேடுங்கள்.
பறவைக்குக் கூடு போதும்; சிங்கத்தின் குகை தேவை இல்லை.
சிங்கத்தின் குகை அதற்குத் தேவைப்பட்டால், சிங்கத்திற்கு அது தேவைப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானியின் பக்குவம், ஆணவம், புத்தகங்கள், பக்குவம், கொண்டு, ஞானியின், வேண்டுமே, சொத்து, ஞானியின் , இருக்கிறார்கள், `நான், இந்துமதம், அர்த்தமுள்ள, என்றால், பத்து, தேவைப்படுகிறது, கோடி, எனக்கு, வேண்டும், சிங்கத்தின், குகை, கொட்டிக், என்பார்கள், லெளகீகத்தில், செலவு, மனிதனது, அதற்குப், அவர், பார்த்து, என்றார், `நான்&, சிறந்த, நான், போது, ஒருமுறை, அவன், பெற்றுக், நிற்க, இறைவனுடைய, சிரிக்கிறானாம், மரியாதை