அர்த்தமுள்ள இந்துமதம் - இளமையின் சுகமான சிந்தனைகள்
கை கால்களுக்கு ஜீவனிருக்கும் காலத்தில் மரங்களின் உயரம் கூடக் குறைந்து விடு
கிறது.
ஏரியில் நீந்திய மீனுக்குத் தெரியும், அதைவிட நான் எவ்வளவு வல்லவன் என்று.
இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது.
மாமரத்தில் மாங்காய் காய்க்கும் போது மனித மனத்திலே துடிதுடிப்பிருக்கும் காலமே
இளமைக்காலம்.
இளமையின் சிந்தனைகள் சுகமானவை.
அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன.
காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர் நீச்சல் போடுகின்றன.
கங்கை நதிக்கு குறுக்கே பாய்ந்து, தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்த முயல்கின்றன.
ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கின்றன.
இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக்காலம் கண்ணுக்குக் காட்டுகிறது.
அது மேளச் சத்தத்தோடு சேர்ந்து கொள்கிறது.
வீணையின் ஒலியில் நர்த்தனமாடுகிறது.
மார்கழிப் பனியில் சட்டையைக் கழற்றிவிட்டு அந்தப் பனியை அனுபவிக்கச் சொல்கிறது.
கோடை காலத்து வியர்வையைக் கம்பீரமாகத் துடைத்துவிடச் சொல்கிறது.
`இப்போது உனக்கு என்ன வேண்டும்’ என்று இளமையைக் கேட்டால், `எல்லாம் வேண்டும்’ என்கிறது.
இரதத்திலே கயிற்றைக் கட்டிப் பல்லாலே இழுக்கிறது.
முதுமையில் தூக்கவே முடியாத எலும்புகளைப் பல்லால் நறநறவென்று கடித்துத் துப்புகின்றது.
கிராமத்து வாழைத் தோட்டங்களுக்குள்ளே ஓடி விளையாடச் சொல்கிறது.
எந்தப் பெண்ணைக் கண்டாலும் மனம் ஏதோ செய்கிறது.
ஆடல், பாடல், எதிர்வழக்காடல், ஏச்சுக்கு ஏச்சு, பேச்சுக்குப் பேச்சு- ருத்ர மூர்த்தியின் ஆனந்தத் தாண்டவம், இளமையின் ஊழிக்கூத்து.
எனக்குப் பன்னிரண்டு வயதான போது கிராமத்தின் பனை மரத் தோப்புகளில் அடிக்கடி அமர்ந்திருப்பேன்.
மாடு மேய்க்கும் சிறு பெண்கள் பாடிக்கொண்டே போவார்கள்.
ஆயர்குலச் சிறுவர்கள் சுதி சேராமல் புல்லாங்குழல் வாசிப்பார்கள்.
பருந்தைப் பார்த்தால் பறக்க நினைப்பேன்.
வெள்ளாடுகளைப் பார்த்தால் ஓட நினைப்பேன்.
பூமியைக் குத்தியதும் பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகளைப் போல வாலிபத்தின் சிந்தனையும் வளமானதாகவே இருந்தது.
அது ஆடி மகிழ்ந்த காலம்.
இது எண்ணிப் பார்க்கின்ற காலம்.
அதே துடிதுடிப்பை மீண்டும் பெறுவதற்கு நான் வைத்தியரை நாடப் போவதில்லை.
அந்தச் சுகமான சிந்தனைகளை இப்போது நான் வேறு பக்கம் திருப்பி இருக்கிறேன்.
வேதாந்தத்தில்,
தத்துவ விசாரத்தில்,
-சுகமான சிந்தனைகள் புறப்படுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்த சில விஷயங்கள், இப்போது ஜீரணிக்கப்படுகின்றன.
`சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும்’ என்று அருட்பெரும் ஜோதி வள்ளலாரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
`தம்பி! மனம் சலனமுடையது; சபலம் மிக்கது; ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ, அவனது நட்பு உனக்கு வேண்டும்.
கோயில் கட்டுகிறேன் என்பான்; கோயில் சொத்திலேயே கொள்ளையடிப்பான்.
அரகர சிவ சிவ என்பான்; அங்கு வரும் பெண் மீதே கண்ணாக இருப்பான்.
மனம் ஒன்று நாடும்; காதொன்று கேட்கும்; வாயொன்று பேசும்;
இவன் பக்தனல்ல; போலி; வேடதாரி.
ஒருமையுடன் தியானிக்கும் உத்தமர் தம் உறவு உனக்கு வேண்டும்.
உள்ளத்தில் வஞ்சம் மறைந்திருக்கும்; முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும்.
`வாருங்கள் வாருங்கள்’ என்று வாயால் அழைப்பான்; சமயம் வாய்த்தால் காலைத்தான் வாருவானே தவிர உன்னை வரவேற்க மாட்டான்.
`பொய்’ என்று தெரிந்து கொண்டே சத்தியம் செய்வான், அவன் கள்ளத்தில் பூத்த மலர்; கபடத்தில் புழுத்த புழு; வெள்ளத்தில் வந்த குப்பை; வேஷத்தில் வாழும் மனிதன்.
அந்த நடிகனோடு, நீ உறவு கொள்ளாதே!
பாடுவதென்றால், மனிதனைப் பற்றிப் பாடாதே; இறைவனைப் பற்றிப் பாடு; பேசுவதென்றால் அவனைப் பற்றியே பேசு.
அவன் ஏராளமான வரங்களை உனக்கு அள்ளித் தரா விட்டாலும் உன்னைக் கேலி செய்யமாட்டான்.
தோளிலே கைபோட்டுப் பையிலே என்ன இருக்கிறது என்று தடவும் நண்பனை விட்டு விலகு.
யாரையோ, ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு; இல்லையேல் பொய்யே பேசாதே.
ஆசைகளில் எல்லாம் உச்சமான ஆசை எது தெரியுமா?
பெண்ணாசை!
மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஒருவனின் முன்னால் சோற்றையும் வைத்துப் பெண்ணையும் வைத்தால் அவன் முதலில் பெண்ணையே தொடுவான்.
மனித மனத்தின் மைய மண்டபத்தில் இருந்தே துயரங்கள் எழுகின்றன.
வாளிப்பான உடம்பையும், வளமான கூந்தலையும் பார்த்து மோகித்து விடாதே.
இந்திரியம் தீர்ந்துவிட்டால், சுந்தரியும் பேய் போலே!
பெண்ணை மறக்க எப்போது `கற்றுக்’ கொள்கிறாயோ, அப்போது உன்னை நினைக்கக் கற்றுக் கொள்கிறாய்.
உன்னை நினைக்கக் கற்றுக் கொண்டு விட்டால், நீ மறக்கவே முடியாதபடி தெய்வம் வந்து உன் மனத்திலே உட்கார்ந்து கொண்டு விடும்.
எல்லாவற்றுக்கும் `அறிவு’ வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - இளமையின் சுகமான சிந்தனைகள், இளமையின், புத்தகங்கள், சிந்தனைகள், உனக்கு, சொல்கிறது, என்ன, மனம், அவன், உன்னை, வேண்டும், கொண்டு, வேண்டும்&, அர்த்தமுள்ள, இந்துமதம், சுகமான , நான், என்பான், கோயில், கற்றுக், உறவு, நினைக்கக், பக்கம், பேசு, பற்றிப், இப்போது, போது, மனித, மனத்திலே, வெள்ளத்தில், சிறந்த, பார்த்தால், சுகமான, காலம், நினைப்பேன், இளமைக்காலம்