அர்த்தமுள்ள இந்துமதம் - துக்கம் தொடாதவனே யோகி
`என்னது! பெரியவர்கள் உரையைப் போட்டே பக்கத்தை நிரப்புகிறாயா? எழுதுவதற்குச் சோம்பேறித்தனமா?’ என்று கேட்கிறீர்களா?
இல்லை. நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ, அதைப் பெரியவர்கள் முன்பே சொல்லியிருக்கிறார்கள்.
அதையே என்னுடைய பாஷையில், பேத்து மாத்துப் பண்ணுவதை விட, அப்படியே கொடுத்து விடுவது மரியாதை என்பதால் கொடுக்கிறேன்.
பெரியவர்களின் அரிய விஷயங்களைத் தேடி அலைய முடியாதவர்கள், இதன் மூலம் பயனடையட்டும் என்று நான் கருதுகிறேன்.
இப்போது `அர்த்தமுள்ள இந்து மதம்’ வரிசை, ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
பெரியவர்களின் அற்புதக் கருத்துக்களை இதன் மூலம் பரப்புவது என் ஆசை.
இந்த கருவூலங்களைப் பரவலாக இளைஞர்களிடம் விநியோகிப்பது என் நோக்கம்.
இவற்றைப் படிப்பதன் மூலம், பெரியவர்கள் உரைகளை இளைஞர்கள் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி.
துக்கத்தைக் குறைப்பதற்கும், ஒரு யோகத்தைக் கடைப்பிடிப்பதற்கும். அவர் சொன்ன வழிகளை மட்டுமே இதில் நான் எடுத்துத் தருகிறேன்.
அவர்கள் சொல்கிறார்கள்:
`நாம் எல்லோரும் பரம்பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும்.
இந்த ஞானம் என்பது என்ன?
பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான்.
அந்த ஒன்று தான் இத்தனையாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனதைச் செலுத்திக் கொண்டிருந்தால், சஞ்சலம், ஏற்றத்தாழ்வு இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இத்தனை தோற்றத்திலிருந்தும் மனதைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால், எண்ணமும் பலவாறாக ஓடி அவதிப்படாமல் சஞ்சலங்கள் ஓயும்.
ஓடுற வஸ்து என்று பின் சலிக்கவோ, ஏற்றத் தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். அந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.’
`உலக வாழ்வில்கூட, சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நிச்சயமாக நிலைத்து இருப்பதில்லை.
வெளியிலிருந்து வருகிற சுகத்தை, நாம் எப்படிச் சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப் படாமல், நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது, அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும்.
இப்படித்தான் அந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடி விடுகிறது.
நிரந்தர சுகம் என்பது, உலகத்துக்கு காரணமான ஒன்றை அறிவதுதான்.
உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும், அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போல பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம்.
ஆனால், பணக்காரனை பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும். அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று.
நாம் திண்ணையில் இருக்கிறோம். விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய் விடும்.
பணக்காரனும், பதவிக்காரனும் மாடி மேல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து ஆகும். ஒருவனுக்குப் பணமும், பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம் பதவி போகக் கூடாது என்ற கவலை, சுகத்தை விட அதிகமாக இருக்கிறது.
இதனால் தான் உலகத்தில் எவனுமே தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பது போல, அதிகம் துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன்பிறப்பு, நம் பூர்வ கர்மவினையின் பயனாக இந்த துக்கங்களுக்கு, நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.
ஆனால், கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாகக் கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் அந்த வழி.
சித்தப்பிரமை பிடித்த ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை. ஆனால், சித்தப்பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமுமில்லை. ஆனால், தூக்கத்தில் சுகமாக இருக்கிறோமென்று அறிவும் இல்லை.
ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்களே இராது என்பதில்லை. ஆனால், அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியே இருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - துக்கம் தொடாதவனே யோகி, அந்த, புத்தகங்கள், இல்லை, துக்கம், நான், என்பது, தான், நாம், தானே, சுகம், மூலம், ஞானம், அர்த்தமுள்ள, யோகி, தொடாதவனே , பெரியவர்களின், இந்துமதம், பெரியவர்கள், பதவியும், பணமும், பதவியில், வந்து, விட்டு, விழுந்தால், கஷ்டம், கொண்டு, உண்டு, நினைத்துக், தூக்கத்தில், கொஞ்சம், இராது, வருவது, காரணமான, நித்திய, கஷ்டங்கள், சொன்ன, சிறந்த, இதன், வெளியிலிருந்து, சுகத்தை, சுகமாக, அடுத்த, செய்யும், அதனால், விடும், நிமிஷமே