அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானிக்கும் தாய்ப்பாசம் உண்டு
பங்காளிகள் இரவு வரை வாதிட்டனர்.
முழுவதும் தனக்கே என்றாள் தமக்கை. குறுக்கே நிற்கவில்லை என் மனைவி.
ஆயினும் பங்காளிகள் சம்மதிக்கவில்லை.
`நான்கில் ஒரு பங்கு தமக்கைக்கு, மூன்று பங்கு என் மனைவிக்கு’ என்று தீர்ப்பளித்தார்கள்.
ஆனால், நான் சொல்வதே முடிவு என்றார்கள்.
நான், `எல்லாம் கோயிலுக்கே!’ என்று கூறிவிட்டேன்.
பிறகு நான் கொள்ளி வைக்கக் கூடாது என்று தடுத்தாள் தமக்கை. அதுவும் ஏற்கப்படவில்லை.
கேளுங்கள்…
நீங்கள் சொத்து வைத்துவிட்டு இறந்தால் உங்களைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். சொத்தைப் பற்றியேதான் கவலைப்படுவார்கள். சொத்து இல்லாமல் இறந்தால்தான் உங்களுக்காக அழுவார்கள்.
சொத்துள்ளவன் `சீக்கிரம் சாகமாட்டானா?’ என்று சுற்றத்தார் நினைப்பார்கள்.
சொத்தில்லாதவன் `உயிரோடு இருந்தால்தானே நம்மைக் காப்பாற்றுவான்’ என்று உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள்.
சடலம் குளிப்பாட்டப்பட்டது. அப்போது தான் எனக்கொரு பாடல் தோன்றிற்று.
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே! விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணியப் பாவமுமே!
தாய்க்குச் சிதை!
என்னைப் பெற்று வளர்த்துப் பேணிய மாதா எரியப் போகிறாள்! நான் பிள்ளையானேன். ஞானி என்பதை மறந்தேன். அழுதேன்; துடித்தேன்; பாடிப் பாடிப் புலம்பினேன்.
ஐயிரண்டு திங்களா யங்கமெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி?
முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாச்சிசுவை யாதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றுந்தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?
அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு;
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்உருசியுள்ள
தேனே! அமிர்தமே! செல்வத் திரவியப்பூ
மானே! எனவழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவ தரிசியோ? தாய் தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே! எனவழைத்த வாய்க்கு?
முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்;
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க! மூள்கவே!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்ப
லாகுதே பாவியே னையகோ! காகம்
குருவி பறவாமல் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்ந்தெடுத்த கை!
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ? சந்ததமும்
உன்னையே நோக்கி யுகத்து வரங்கிடந்தென்
தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தா அன்னை; வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தாள், இன்றுவெந்து நீறானாள் பாற்றெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்றி ரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.
ஈன்றெடுத்த மாதாவின் சடலம் எரிந்து முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானிக்கும் தாய்ப்பாசம் உண்டு, புத்தகங்கள், நான், யிட்டதீ, மூட்டுவேன், இந்துமதம், தாய்ப்பாசம் , உண்டு, அர்த்தமுள்ள, ஞானிக்கும், சுமந்து, எனவழைத்த, அன்னை, ஈன்றெடுத்த, நொந்து, தாய், வாய்க்கு, சொத்து, பங்காளிகள், கூடினர், சிறந்த, தமக்கை, பங்கு, பெற்று, சடலம், பாடிப்