அர்த்தமுள்ள இந்துமதம் - உடல் நலத்தை பாதிக்கும் கோபம்
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுடன் அவரது வீட்டில் ஒரு நாள் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த வீட்டுக்கு ஒரு கடன்காரர் ஜப்தி கொண்டு வந்தார்.
`என்ன?’ என்று கேட்டார் கலைவாணர்.
`அட்டாச்மெண்ட்’ என்றான் அமீனா.
`ஆகா! ஆகா! உனக்கும் நமக்கும் நல்ல அட்டாச்மெண்ட்’ என்று சிரித்தார்.
அவர் பதறவில்லை; பயப்படவில்லை; மிகச் சாதாரணமாகவே அதை எடுத்துக் கொண்டார்.
அமீனா கண்ணீர் வடித்தானே தவிர, கலைவாணர் கண்ணீர் வடிக்கவில்லை.
லண்டன் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு பெண்மணி, ஒருமுறை பிரதம மந்திரி சர்ச்சிலைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினாள்:
`நான் மட்டும் உமது மனைவியாக இருந்தால், என் கையாலேயே உமக்கு விஷம் கொடுப்பேன்!’ என்று.
ஆத்திரமில்லாமல் சர்ச்சில் பதில் சொன்னார்:
`அம்மணி! உங்களைப் போன்ற மனைவி எனக்குக் கிடைத்தால் விஷத்தைச் சந்தோஷமாகக் குடிப்பேன்!’ என்று.
உன்னோடு வாழ்வதை விட `விஷமே மேல்’ என்பது அதன் பொருள்.
ஆத்திரமான கேள்விகளை அமைதியாகச் சமாளித்தால் பகைவனே நண்பனாகி விடுவான்.
சமயங்களில் நாமே தவறு செய்து விடுகிறோம்; அதுவே எதிரொலிக்கும் போது ஆத்திரப்படுகிறோம்; இது மனித சுபாவம்.
ஆனால், தர்மன் ஆத்திரப்படவில்லையே!
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது, தர்மன் சபையிலே தான் இருந்தான். அவன் கோழையல்ல; ஆயினும் அமைதியாக இருந்தான். காரணம், நாம் செய்த தவறுக்குப் பிறரை நோவானேன் என்பதே.
வட்டமேஜை மாநாட்டுக்கு முழந்துண்டு கட்டி காந்தி போனபோது, வெள்ளைக்காரப் பிரபுக்கள் கேலியாகக் காந்தியைப் பார்த்துச் சிரித்தார்கள். காந்தி அமைதியாகப் புன்கைத்தார்.
இறுதியில் வென்றது அமைதிப் புன்னகையே தவிர, கேலிச் சிரிப்பல்ல.
வெல்லக் கூடிய பகையின் மீது நீ சபத
மெடுத்தால் உன் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
காரணம் தன்னம்பிக்கையின் உச்சம்.
`துச்சாதனனின் தொடையைப் பிளந்து ரத்தம் குடிப்பேன்’ என்று பீமன் சபதம் செய்த போது, அவனது ரத்தக் கொதிப்பு அதிகமாகவில்லை.
காரணம், தன்னால் அது முடியும் என்ற நம்பிக்கை, `அல்டோமெட்’ மாத்திரை போல கூடவே நின்றது.
`செல்லா இடத்து சினம் தீது.’
(இதை நான் `அர்த்தமுள்ள இந்து மதம்’ மூன்றாம் பாகத்தில் `கோபம் பாவம் சண்டாளம்’ என்ற தலைப்பில் விவரித்துள்ளேன்.)
பகவான், கீதையிலே மூன்று குணங்களை விவரிக்கிறார் அல்லவா? சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று. அதிலே சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும்.
ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும்.
தமோ குணம் அதை நினைத்து நினைத்து அழும்.
பின் இரண்டு குணங்களில் உன் உடல்நிலை பாதிக்கப்படும்.
முதல் குணத்தில் எதிரியே பாதிக்கப்படுவான்.
சாத்விக குணம் உள்ளவனையே, `சாது’ என்கிறார்கள்.
`சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்கள்.
அடிக்கடி கோபப்படுகிறவனை ஊர் மதிக்காது.
சாதுவுக்குக் கோபம் வந்தால், `இவனுக்கா கோபம்’ என்பார்கள்.
புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால், பகை உணர்ச்சி அழியும்; பகைவன் பணிவான்; உள்ளம் ஒரு முகப்படும்; உடல்நிலை ஒரே சீராக இருக்கும்.
பகையிலே தாறுமாறாக வந்து விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும்போது குறுக்குச் சுவராகித் தடைகல்லாகி விடும்.
பகையில் நிதானம் வந்தால், நட்பு சந்நிதானமாகி விடும்.
அந்தச் சந்நிதானத்தில் பகைவன் பக்தனாவான்; நீ தெய்வமாவாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - உடல் நலத்தை பாதிக்கும் கோபம், குணம், புத்தகங்கள், கோபம், கலைவாணர், உடல், காரணம், உடல்நிலை, போது, பாதிக்கும், நலத்தை, அர்த்தமுள்ள, இந்துமதம், இருக்கும், சத்துவ, என்பார்கள், விடும், நட்பு, பகைவன், வந்தால், நினைத்து, செய்த, கண்ணீர், அமீனா, நான், சிறந்த, தவிர, பார்த்து, என்பது, இருந்தான், தர்மன், காந்தி