அர்த்தமுள்ள இந்துமதம் - பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா?
“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே” என்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.
“முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல்இடை கடைநமது வசத்திலில்லை.”
என்றான் மகாகவி பாரதி.
எந்தத் தாயின் வயிற்றில், எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.
பின்னாளில், நாம் வைத்துக் கொள்கிற புனைபெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.
உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா. இது வைத்தீசுவரன் கோயில் சுவாமியின் பெயர். அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.
என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.
என் பெயரை மாற்றி ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது `கண்ணதாசன்’ என்ற பெயர் எனக்கேன் தோன்றிற்று?
அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.
உண்மைதான்.
காலங்களால் அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாகி விட்டது.
கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!
நானும் எட்டாவது குழந்தை.
கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.
சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.
பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்.
நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தர்.
உதாரணமாக,
“எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப்பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்” என்று `அநாகத வேதம்’ என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக் குணமாகி விட்டதாம்.
“ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது” என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
`பதவீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம்.
`மேலைத் தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை.
முற்பிறப்பின் கருமவினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.
அலகாபாத்தில் செல்வந்தர் மகனாகப் பிறந்தவர் பரத கண்டத்தில் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும், திருவாரூரிலும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானதும் அவர்களுடைய திறமையினாலா? முயற்சியினாலா?
எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை, தமிழகத்தின் தலைவனாகி, ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டி நூற்றுக்குத் தொண்ணூறு பேரைப் படிக்க வைத்தது எப்படி முடிந்தது?
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்.”
என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?
ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன?
முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.
முயற்சியால் ஆகக்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.
ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்பமுடியாது.
ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது “நாத்திகம் பேசியதால் வந்தது” என்றார்கள்.
ஆத்திகம் பேசிய ரமணரிஷிக்கு ஏன் வந்தது?
சிலருக்குப் பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.
பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?
`புகையிலை உபயோகிப்பதால் வருகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?
ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்டநாள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.
நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.
அளவின்றிச் சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?
இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?
எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது?
ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.
நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்றான் வள்ளுவன்.
ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின்படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா?, பெயர், நான், என்ன, அடுத்த, புத்தகங்கள், பூர்வ, ஒன்று, மந்திரியானதும், காரணம், வந்தது, பிறவியில், நாடி, நாம், அர்த்தமுள்ள, உண்டா, ஜென்மம், இந்துமதம், ஒவ்வொரு, இறைவன், பிறப்பில், இந்தப், ஆண்டவனின், எப்படி, ஒருவர், பிறந்தவர், வழங்குகிறது, ஆகவே, நடந்து, பாதியையும், கணக்கைக், என்கிறார்கள், தவிர, என்றார்கள், பொடி, என்பதைத், சாஸ்திரத்தில், வைத்துக், கொள்கிற, உதாரணமாக, அந்த, என்பதையும், என்றான், சிறந்த, நம்முடைய, நமது, பெயரை, இருந்ததால், இன்னதென்றும், அதற்குரிய, பரிகாரம், முன், என்பதும், அந்தப், எட்டாவது, குழந்தை, என்பது