ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார்.
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின் முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு. |
கண்ணை நெற்றியிலுடைய தலையினையுடையவனும். இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும் எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும் ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான கழுத்தையுடையவனுமான சிவபெருமான் பெற்றெடுத்த யானைமுகக் கடவுள் யாம் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றையும் நன்றாக முடிவுபெறச் செய்து எங்களுக்கு (இவ்வுலகத்தே) பொருந்தியுள்ள கல்விப்பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும்.
நூல்
1. குறிஞ்சி
அவரை பொருந்திய பைங்குரல் ஏனல் கவரி கடமா கதூஉம் படர்சாரல் கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு) யானிடை நின்ற புணை. |
1 |
(பழைய வுரை) அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தினையைக் கவரிமடமா கதுவாநின்ற படர்ந்த சாரலினையுடைய கானகநாடனே! மறவாது நினைப்பாயாக; வயங்கா நின்ற அணியினையுடையாட்கு யான் நடுவுநின்ற புணையினை.
மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும் குன்றன நாடன் தெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. |
2 |
(ப-ரை.) மன்றங்களிலே நெருங்கிய கல்லின்கண் கருங்கண் முசுக்கள் குதிபாயுங் குன்றகநாடன் என் மனத்தைத் தெளிவித்த தெளிவினைப் பிழையாதென்று தேறினேற்கு அவன் செய்த தலையளி யொன்று ; அவ் வொன்றும் அப்பெற்றித்தாய்ப் பழுதாகாது.
மன்றப் பலவின் களைவிளை தீம்பழம் உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து) ஆமா சுரக்கும் அணிமலை நாடனை யாமாப் பிரிவ(து) இலம். |
3 |
(ப-ரை.) மன்றின்கண் நின்ற பலவின் சுளைமுதிர்ந்த இனிய பழத்தைத் தின்றின்புற்று வந்து ஆமாவின் முலையை மந்தி வருட அவ்வாமாத் தன் கன்றிற்குப்போல அன்பு பட்டுப் பாலைச்சுரக்கும் அணிமலைநாடனை யாமுளேமாகப் பிரிவதிலம்.
சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில் கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. |
4 |
(ப-ரை.) அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலைபெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின்கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற்றிகழாநின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னாநின்றது என்னெஞ்சு.
பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து) இன்னுயிர் தாங்கும் மருந்து. |
5 |
(ப-ரை.) பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக ; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையாதலால், நின்கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கு மருந்து நல்காயோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, எழுபது, இலக்கியங்கள், நின்ற, ஐந்தினை, கீழ்க்கணக்கு, பதினெண், கேண்மை, மந்தி, சோலையையுடைய, வயங்கிழைக்கு, மருந்து, பலவின், நன்மலை, வேங்கை, பொருந்திய, நூல், சங்க, கடவுள், எல்லாவற்றையும், மறவல், அவரை, தலையளி