சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள்
சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு
- இளங்கோவன்
சிங்கப்பூரில் தமிழ் நாடகத்துக்கு இன்னமும் சரியான முகவரி இல்லை. பிழைப்புக்காக வந்த முந்திய தலைமுறையினரும் அவர்தம் வம்சாவழியினரும் கொண்டு வந்த, வளர்த்த உதிரி கலை கலாசார இத்யாதிகள் அவ்வப்போது, பொழுதுபோக்குக்காகவும் சமூக சம்பிரதாயங்களுக்காகவும் கலைகளில் நாட்டத்தை வளர்த்திருந்தாலும் ஒரு முழுமையான ஆழமான வகைப்படுத்தக்கூடிய வளர்ச்சி என்பது நாடகத்தில் இல்லை. இசைக்கும் நடனத்துக்கும் இக்கணிப்பு வேறுவிதமாக அமையும். இசைக்கும் நடனத்துக்கும் தமிழினத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் நவீன தமிழ்நாடகத்துக்கு, ஏன், தெருக்கூத்துக்கும் வழங்கப்படவில்லை. நாடகம் திரைப்படம் இரண்டுமே நம்மினத்துக்குக் குஷ’யைக் கிளப்பும் விஷயங்களே தவிர தீவிரக் கலை வேட்கைக்கும் விமர்சனப் பார்வைக்கும் உரிய தளங்கள் என்று உணரப்படவில்லை. இப்புரிதலோடுதான் நான் சிங்கப்பூர் தமிழ் நாடகப் போக்குகளைப் பார்க்க விரும்புகிறேன்.
தமிழனின் உண்மையான கூத்து எது என்ற தேடலில் இன்று நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். நாட்டிய சாஸ்திரத்தின் சமஸ்கிருத வடிவங்களின் நகலா, நிழலா தமிழனின் கூத்து என்ற ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. இயல்பாகவே வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத இனமாக போனதாலும் கறையான்களோடு அதிகம் உறவு வைத்துக்கொண்டதாலும் ஆதாரங்களை இழந்துவிட்டோம். இடையில் காலனித்துவம் நானூறு ஆண்டு இடைவெளியை உருவாக்கி பாரம்பரியக் கூத்துக்கும் பார்ஸ’/மராத்தி நாடகப் பாதிப்பால் விளைந்த விலாச நாடகத்துக்கும், நடுத்தர வர்க்கத்தின் சபா நாடகத்துக்கும் இன்றைய நவீன நாடகத்துக்கும் இடையிடையே வெற்றிடங்களை வகுத்துக்கொடுத்து விட்டது. இவ்வெற்றிடங்களை கலை, சமூக, வரலாற்று, அரசியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து மறைந்திருக்கும் பழைய மரபுகளையும் குறியீடுகளையும் வெளிக்கொணர்ந்து விஞ்ஞானபூர்வமாய் விளக்கும் பகீரதப் பிரயத்தனக் கடமை நமக்கு இருக்கின்றது.
1870ம் ஆண்டு Wayang Farsi என்னும் பார்ஸ’ நாடகக் குழு இந்தியாவிலிருந்து மலேயாவுக்கு வந்தது. இந்துஸ்தானி கீர்த்தனைகளோடு அமைந்த புராதனக் கதைகளை நாடெங்கும் அரங்கேற்றியது. இந்நாடக வடிவம் மலாய் இனத்தவரைப் பாதித்தது. தொடர்ந்து பல பார்ஸ’ நாடகக் குழுக்கள் மலேயா வரத்தொடங்கின, பார்ஸ’ நாடகக்காரர்கள் மலேயாவில் தங்கினர். திருமணம் செய்து கொண்டனர். நாடகச் சந்ததியினரை உருவாக்கினர். பினாங்கு (Penang) தீவில் வேர்விட்ட இவ்வடிவமே இன்று மலாய்க்காரர்களின் மரபு இசை நாடக வடிவமாய் பரிணமித்து Bangsawan என்று அழைக்கப்படுகிறது.
இதன்பிறகு தமிழ்நாட்டிலிருந்து விலாச நாடகக் குழுக்களும் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுக்களும் மலேயாவுக்கும் சிங்கப்பூருக்கும் வரத்தொடங்கின. இரண்டாம் உலகப்போருக்கு முந்திய பல்வேறு குழுக்களின் வருகையாலும் பல கலைஞர்கள் இங்கேயே தங்கியதாலும் சிங்கப்பூரில் தமிழ் நாடகத்துக்குப் பொதுவாக ஒருவித சபாநாடக யதார்த்த பாணி வடிவமே வாய்த்தது. அரங்கேறிய நாடகங்களைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை.
அரை நூற்றாண்டுக்கு முன்வரை தெருக்கூத்து இங்கு ஆடப்பட்டதற்கான செவிவழித் தகவலே உண்டு. மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தின்போது "அர்ச்சுனன் தபசு" க்காக சில குடும்பத்தினர் வருடந்தோறும் வேஷங்கட்டி வந்ததாக அறிய முடிகிறது. மீண்டும் ஆதாரங்கள் இல்லை.
1920களில் இருந்து தமிழ்நாட்டு பாய்ஸ் கம்பெனிகளின் எண்ணற்ற வருகையால் சிங்கப்பூர் தமிழ் நாடகம் பாதிப்படைந்து வந்திருக்கிறது. மதனவேலு பிள்ளை (22.4.1971ல் காலமாகி விட்டார்) 1925ம் ஆண்டு காதர் பாட்சா நாடகக்குழுவோடு சிங்கப்பூர் வந்தார். இங்கேயே குடியேறி தேவகான சபாவை நிறுவினார். இசை நாடகங்களை நடத்தி வந்தார்.
1935 முதல் ந. பழநிவேலு உணர்ச்சிகரமான பல சமூக சீர்த்திருத்த நாடகங்களை தமிழர் சீர்திருத்தச் சங்கத்துக்காக எழுதித் தயாரித்தார். திராவிட இயக்கக் கொள்கையின் பிரசார நெடிமிக்கவை அந்நாடகங்கள். திராவிட இயக்கப்பாதிப்பும் பெரியாரின் கொள்கைகளின் ஈர்ப்பும் உள்ள தமிழர்கள் மலேயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்து வந்த காலகட்டம் அது. சாதி ஒழிப்பு, விதவை மறுமணம், சீர்த்திருத்தத் திருமணம் போன்றவை நாடகக் கருக்களாயின.
திமுக பாணி சமூக சீர்திருத்த நாடகங்களையும் குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட சமூக நாடகங்களையும் ச.வரதன் 1955 முதல் பகுத்தறிவு நாடக மன்றத்தின் சார்பிலும் பின் 1970 முதல் 1987வரை சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தின் சார்பிலும் தயாரித்து, இயக்கினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழ் நாடகம்.... தற்குறிகளின் கொலு - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நாடகக், நாடகம், சிங்கப்பூரில், சமூக, சிங்கப்பூர், பார்ஸ’, தற்குறிகளின், கொலு, இல்லை, நாடகத்துக்கும், ஆண்டு, வந்த, கலைக், கட்டுரைகள், நாடக, திருமணம், வரத்தொடங்கின, குழுக்களும், கதைகளை, சார்பிலும், திராவிட, வந்தார், பாணி, இங்கேயே, நாடகங்களையும், பாய்ஸ், நாடகங்களை, நாடகப், திரைப்படம், முந்திய, கலைகள், arts, drama, இசைக்கும், நடனத்துக்கும், இன்று, அதிகம், கூத்து, தமிழனின், நவீன, விலாச