2 சாமுவேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 மூன்றாம் நாள் சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணக்கம் புரிந்தான்.
3 தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான்.
4 மீண்டும் தாவீது அவனை நோக்கி "நடந்தது என்ன? எனக்கு அறிவி" என்றான். அதற்கு அவன், "மக்கள் போரை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களில் பலர் மடிந்தனர்@ அன்றியும் சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்தார்கள்" என்றான்.
5 அப்போது தாவீது அந்த இளைஞனை நோக்கி, "சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்துவிட்டனர் என்று எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான்.
6 அதற்கு, செய்தி கொணர்ந்த இளைஞன், "தற்செயலாய் கெல்போயே மலைக்குப் போனேன்@ சவுல் தம் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் தேர்களும் குதிரை வீரர்களும் அவரை தொடர்ந்து நெருங்கினார்கள்.
7 அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான் ~இதோ இருக்கிறேன்~ என்றேன்.
8 அப்பொழுது, ~நீ யார்?~ என்று அவர் கேட்க, நான் ~அமலேக்கியன்~ என்று சொன்னேன்.
9 அப்பொது அவர் என்னை நோக்கி, ~நீ என் மேல் நின்று என்னைக் கொன்று போடு. ஏனெனில் என் உயிர் என்னிடம் இன்னும் இருப்பதால் எனக்கு இடுக்கண் நேர்ந்துள்ளது~ என்றார்.
10 வீழ்ந்தபின் அவர் பிழைக்கமாட்டார் என்று நான் அறிந்திருந்ததால், அவர்மேல் நின்று அவரைக் கொன்றுபோட்டேன். பின்பு அவர் தலைமீது இருந்த மகுடத்தையும், அவர் புயத்திலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு இங்கு என் தலைவராகிய உம்மிடம் கொணர்ந்தேன்" என்றான்.
11 இதை கேட்டு தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
12 சவுலும் அவர் மகன் யோனத்தாசும், ஆண்டவருடைய மக்களும், இஸ்ராயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனர் என்று கதறி அழுது, மாலை வரை நோன்பு காத்திருந்தனர்.
13 பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான்.
14 தாவீதோ, "ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்ட அஞ்சாதது ஏன்?" என்று சொன்னான்.
15 தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, "நீ பக்கத்தில் வந்து அவன் மேல் பாய்ந்து அவனை குத்து" என, இவன் அவனைக் குத்தினான்@ அவனும் இறந்தான்.
16 தாவீது அவனைப் பார்த்து, "உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே இருக்கட்டும்@ ஏனெனில், ~ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்~ என்று உன் வாயே உனக்கு எதிராய்ச் சாட்சி சொன்னது" என்றான்.
17 தாவீதோ சவுலின் மீதும் அவன் மகன் யோனத்தாசின் மீதும் பின்வருமாறு புலம்பல் பாடி,
18 நீதிமான்களின் நூலில் எழுதியுள்ளபடி அதை யூதாவின் புதல்வருக்குக் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான். அப்பாடலாதது: "இஸ்ராயேலே, உன் உயர்விடங்களில் காயம் அடைந்து இறந்தவர்களை எண்ணிப்பார்.
19 புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்?
20 கெத்திலும் இதை அறிவிக்காதீர்கள்@ அஸ்கலோனின் தெருக்களிலும் இதைத் தெரியப்படுத்தாதீர்கள். தெரிவித்தால், பிலிஸ்தியரின் புதல்விகள் அகமகிழ்வர்@ விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் பெண்கள் களிகூர்வர்!
21 கெல்போயேயின் குன்றுகளே, பனியோ மழையோ உங்கள்மீது பொழியாதிருப்பதாக! உங்கள் வயல்கள் முதற்பலனைத் தராதிருப்பனவாக! ஏனெனில் அங்கேயன்றோ சவுல் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படாதவர் போல் தம் கேடயத்தைத் தரையில் எறிந்துவிட்டார்! வலியோரின் கேடயம் அவமதிக்கப்பட்டதே! சவுலின் கேடயமும் அவமதிக்கப்பட்டதே!
22 இதற்குமுன் யோனத்தாசின் அம்பு கொலையுண்டவர்களின் உதிரத்தைக் குடிக்காமலும், வலியோரின் கொழுப்பை உண்ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்ததில்லை! சவுலின் வாளோ வெறுமையாய்த் திரும்பினதில்லை!
23 உயிரோடிருக்கையில் சவுலும் யோனத்தாசும் அன்பும் அழகும் உள்ளவர்களாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரிந்து போகவில்லை.அவர்கள் கழுகுகளிலும் வேகம் உள்ளவர்களாய், சிங்கங்களிலும் வலிமை உள்ளவர்களாய் இருந்தார்கள்.
24 இஸ்ராயேலின் புதல்விகளே, சவுலுக்காக அழுங்கள்! ஏனெனில் அவரே ஒண் சிவப்பு மெல்லாடைகளால் உங்களை உடுத்தி உங்கள் உடைகளின் மேல் பொன்னணிகளை அணிவித்தவர்!
25 போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு?
26 தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வதுபோலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்!
27 வலியோர் வீழ்ந்தது எங்ஙனம்? போர்க்கருவிகள் அழிந்தது எவ்வாறு?"
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 சாமுவேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", அவர், தாவீது, நான், அவன், ஏற்பாடு, நோக்கி, என்றான், சவுலும், மகன், ஏனெனில், மேல், எவ்வாறு, யோனத்தாசும், சவுலின், பழைய, சவுல், அவனை, ஆகமம், அபிஷேகம், உள்ளவர்களாய், சாமுவேல், அதற்கு, உனக்கு, மீதும், எங்ஙனம், யோனத்தாசு, அன்பு, யோனத்தாசின், உங்கள், தாவீதோ, வீழ்ந்தது, அவமதிக்கப்பட்டதே, வலியோரின், இருந்தார்கள், உயர்விடங்களில், நின்று, வருகிறாய், நாள், பாசறையினின்று, எனக்கு, இஸ்ராயேல், வந்து, இளைஞனை, ஆன்மிகம், எங்கிருந்து, இருந்த, திருவிவிலியம், என்னைக், செய்தி, பார்த்து, விழுந்தனர்