கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
|
சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண் சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச் சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச் சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே. |
89 |
அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள், உயர்ந்த, அந்த வலிய கழுவில் ஏறி மடியும்படி, சம்பந்தப் பிள்ளையாக அவதரித்து தேவாரம் பாடி ஜெயித்தவன், விழியானது, சேல் மீனையும் வேலாயுதத்தினையும் ஒத்த கூரிய விழியை உடைய, காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளி நாயகியின், நாயகன், பஞ்சேந்திரியங்களின் சேஷ்டைகளை, நீக்கிய தவ சிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட, ஆபத்துக்களுக்குக் காரணமான, சத்துருவாகிய சூரபத்மாவை, குற்றும்படி, இறுக்கக்கட்டிய, பிதாம்பரப் பட்டில், எல்லா மாதர்களும், தங்கள் தங்கள் உள்ளங்களை, கப்பமாக செலுத்திவிட்டனர். ..
|
சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச் சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ் சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. |
90 |
கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர் மோட்சம் அடையும் பொருட்டு, வெளி பூஜை மட்டும் செய்து வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்? எல்லோருக்கும் இறைவனாகிய, எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின், குழந்தையே, செந்திலாண்டவனே, சமுத்திரத்தின் கண், தங்கள் தங்கள் பெருமையை, கூறி ஆர்ப்பாரித்து வந்த, அசுரர்களை, அழித்த கந்தக் கடவுளே, சந்திரன், கோயில் மதில் மேல், தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள), ஸ்ரீரங்கநாதரின், பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்), வேதங்கள் பூஜிக்கும், பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும், சுவாமியே. ..
|
திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந் திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில் திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. |
91 |
சக்ராயுதத்தை, வலக் கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு கொள்ள முடியாத (பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை உபதேசித்த, சுவாமிமலைப் பதி, வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி, திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு, திருவலம், வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த, குமாரக் கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும் குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே. ..
|
சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற் சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச் சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே. |
92 |
அழகாக இருக்கிறது, இந்த மங்கையின், வளை அணிந்த தோள்கள், என்று மகிழ்ந்து சொல்லி முன்பு தேவைப்பட்ட காலத்தில் என்னைப் புணர்ந்த, குமாரக் கடவுளே, வெள்ளி மலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள், வணங்குகின்ற, தணிகை மலைக்கு அதிபனே, நீ தழுவின பெருமிதத்தால், இருமாப்புக் கொண்டு, துவளுகின்ற, கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை, நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது? எனது மார்பகத்தின் திரட்ச்சியை, இந்த மாதிரியாகக் குலைக்கும்படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன், செய்து விட்டான், என் அருகில் வராமல், அவ்விடத்திலேயே நின்று கொள். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வலம்புரி, வணங்கு, சேடி, திகிரி, சேலையி, சித்தத், தங்கள், லாருந், உடைய, தரங்கத்தர், இருக்கிறது, குமாரக், செய்து, அந்த, என்ன, கடவுளே