கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
|
திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந் திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத் திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே. |
61 |
தெய்வயானையின் மணாளனே, சமுத்திரத்தின் கண், திருச்செந்தூரில் விளங்கும், முத்தின் கொழுந்தொளி போன்றவனே, முன்னொரு காலத்தில், அஷ்ட திக்கு பாலர்களும், ஆட்டை நிலையான வாகனமாக உடையவனும், சிவபெருமானிடத்தில் சென்று, அரனே, உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவனே, திதியின் பிள்ளைகளான சூரபத்மாதி அசுரர்களால், எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, எப்படித் தாங்கி பிழைப்போம்? என்று முறையிடுகையில், அவர் உனக்கு அளித்த, அடியவரின் இடரை நீக்குவதையே நெறியாகக் கொண்ட, கை வேலாயுதத்தை, நீ அவர்கள் மேல் எய்தி அவர்களை அழித்திராவிடில், அந்த தேவர்கள் எப்படி பிழைத்திருப்பார்கள்? ..
|
திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந் திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித் திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. |
62 |
தேவயானையின் பல்லாகிய, இனிய, முத்தானது, செலுத்துகின்றதும், தன்னால் நுகரப்பட்டதும் ஆன, அதரபானமாகிய அமுதத்தால், மனம் குழைந்த, உள்ளம் உடையவனே, கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தும் அது எள்ளை அரைக்கும்போதுதான் வெளி வருவது போல, சராசலமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டும் நேரே தெரிகின்ற, செந்திலாண்டவனே, ஆயுத வகையில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கும் வேலாயுதத்தை ஏந்தியவனே, கந்தக்கடவுளே, என்று துதித்து ஓலமிடாமல், உன்னிடம் பக்தி இல்லாத மாற்றார்கள் போல், முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட, பெரிய தீவினைகளை நான் அடைந்து, வருந்தி உழல்வது, என்ன காரணம்? ..
|
தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர் தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத் தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே. |
63 |
சங்க நிதி பதுமநிதி இவைகளும், கற்பக விருட்சமும் ஆக விளங்கும், செல்வத்தினை உடைய பொன்னுலகு, முன்பு அழியாமல் பிழைக்கும்படி, நிலை பெற்ற கிரவுஞ்ச கிரியை, போரில் வென்று அழித்த, முழு வீரனே, சற்றும் கலக்கமில்லாத, ஐம்புலங்களை உடைய, இந்த தேகம், அந்திம காலத்தில் அக்கினியில் வெந்து போவதும், எருமை வாகனமுடைய எமதூதன் (என்னை எமபுரத்திற்கு கொண்டு சென்று) வாயைத் திற, சற்றும் தவம் செய்யாத பாவியே, (கருணை இல்லாமல் பிராணிகளை கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு, என்று கூறப்போவது, உண்மை ஆதலால், பிரம லிபி என் தலையில் எழுதப்பட்டு, பிரம்மன் என்னை மீண்டும் சிரிஷ்டிக்காதபடி என்னைக் காத்தருள வேண்டும். ..
|
சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச் சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச் சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே. |
64 |
தெய்வீகம் பொருந்திய வள்ளியின், (கருணையினால்) சிவந்த, இதய தாமரை போல் விளங்கும், முகார விந்தம் உடையவனே, கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற வீரனே, தலைவனே, பழனிப் பதியானே, ரிஷப வாகனத்தின் மேல், நிலைபெற்று வரும், குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு, முன்னொரு காலத்தில், நீ பிரணவ உபதேசத்தை செய்ய, வேதம் ஓதுவதில் வல்லமையும், அன்ன வாகனத்தையும் உடைய, பிரமனுக்கு, எதனால், வெட்கத்தை அடைந்து, பொருள் தெரியாமல் மயங்கி நின்றது? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தியங்காப், திலமுந், திக்கர, சேவக, சத்தி, மன்ன, தயில, உடைய, பொறியுண், காலத்தில், விளங்கும், கிரவுஞ்ச, சற்றும், என்னை, வீரனே, அழித்த, கொண்டு, வேலாயுதத்தை, சென்று, முன்னொரு, மேல், உடையவனே, போல், தெரியாமல், அடைந்து