கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
|
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே. |
15 |
பிரயாணத்திற்கென்று செலுத்துகின்ற மயில் வாகனத்தின் மீதும் தேவர்களின் தலையின் மீதும் தேவரீரின் திருவருள் துணைகொண்டு அடியேன் பாடிய பாடல்களின் அடிகளையுடைய ஏட்டின் மீதும் பட்டது அன்றோ, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி பூமியை யாசித்துப் பெரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும் படி சிவந்த திருவடியை நீட்டி அளந்த பெருமையை உடைய திருமாலின் மருகராகிய திருமுருகப்பெருமானது சிறிய திருவடி?
|
தடுங்கோ் மனத்தை விடுங்கோ் வெகுளியைத் தானமென்றும் இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல் விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. |
16 |
மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்யுங்கள்; கோபத்தை அறவே விட்டு விடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; இருந்தபடியே அசைவற்றுப் பேசாமல் இருங்கள். [இவ்வாறு செய்வீர்களானால்] ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து துகள் பட்டு அழியும் படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப் பெருந்தலைவராகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.
|
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச் பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச் சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. |
17 |
வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையையுடைய திருமுருகப்பெருமானின், வெட்சி மலரால் ஆகிய மாலை மலர்ந்துள்ளதும் தண்டை என்னும் அணிகலனை உடையதுமாகிய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காவலாகக் கொண்டு, வேறு ஒருவருக்கும் தெரியாத நல்ல நெறியாகிய, இரவும், பகலும், மறத்தலும், நினைத்தலும், வஞ்சகமும் அற்ற பரவெளியில் மறைந்து பேசாது சும்மா இருக்கும் [அநுபூதி] நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது வருவாயாக மனமே.
|
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. |
18 |
கூர்மையான ஒளி வீசும் அழகான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து ஏழைகளுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள். உங்களுக்கு இவ்விடத்து வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருளும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், கூர்மையான, எப்போதும், மனத்தை, திருமுருகப்பெருமானது, வந்து