தியாக பூமி - 4.24. 'மாட்டேன்! மாட்டேன்!'
சாரு, மங்களத்துக்கு முன்னால் சாவித்திரியின் ரூபமாகத் தோன்றி, "எனக்கு உன் பேரில் கோபமில்லை" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில், உண்மையான சாவித்திரி சென்னை ஐகோர்ட்டில் சாட்சிக் கூண்டில் கோபமே உருவெடுத்தவள் போல் நின்றாள்.
ஸ்ரீதரன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டான். உமாராணியின் மேல் நிஜமாகவே தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுத்து அவளைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.
கோர்ட்டில் அப்போது உமாராணியின் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல் மிஸ்டர் நாராயணன், பி.ஏ., பி.எல்., குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். இந்த நாராயணன் தான் ஸ்ரீதரனுடைய பழைய சிநேகிதனாகிய நாணா என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. நாணாவின் மாமனார் காலஞ்சென்ற பிறகு அவன் பாடு ரொம்பவும் கஷ்டமாய்ப் போயிருந்தது. பெரிய பெரிய வக்கீல்கள் எல்லாம், "காலங்கெட்டுப் போச்சு; கேஸுகள் குறைஞ்சு போச்சு!" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், கத்துக்குட்டி நாணாவை யார் கவனிக்கிறார்கள்? "எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்" என்ற தோரணையில்தான் அவன் கோர்ட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட நிலைமையில், ஸ்ரீதரனுடைய கேஸ் அவனுக்குப் பெரியதொரு வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது. இதன் மூலம் தான் பெயரும் பிரஸித்தியும் அடையலாம் என்றெண்ணினான். "ஸ்ரீதரா! இப்போதைக்கு, பீஸ், கீஸ் ஒன்றும் நான் கேட்கவில்லை. கேஸ் ஜயிச்சுதோ, அப்புறம் என்னைக் கவனிச்சுக்கோ, போரும்-ஓ! இந்தக் கேஸ் மட்டும் ஜயிச்சுதுன்னா அப்புறம் உனக்கு என்ன குறைச்சல், எனக்குத்தான் என்னடா குறைச்சல்?" என்று ஸ்ரீதரனை உற்சாகப்படுத்தினான்.
இப்படியாக, இந்தத் தாம்பத்திய உரிமை வழக்கு ஜயமடைய வேண்டுமென்பதில் ஸ்ரீதரனுக்கு இருந்த கவலையைக் காட்டிலும் நாராயணன், பி.ஏ.,பி.எல்., அவர்களுக்குக் கவலை அதிகமாயிருந்தது. ஆகவே, மிகவும் சிரத்தையுடன் கேஸை நடத்தினார். அந்தச் சிரத்தையை இப்போது, உமாராணியைத் தாறுமாறாகக் கேள்வி கேட்டு, அவளுடைய மனம் கலங்கும்படி அடிப்பதில் காட்டினார்.
"புருஷன் வீட்டிலே நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதாகச் சொல்கிறீர்களல்லவா? அந்தக் கஷ்டங்களை அந்தக் காலத்திலேயே யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா? உதாரணமாக, உங்கள் தகப்பனார் சம்பு சாஸ்திரியிடமாவது சொல்லியதுண்டா?" என்று கேட்டார்.
உமா சற்று யோசித்துவிட்டு, "இல்லை" என்று பதில் சொன்னாள்.
"அவ்வளவு கஷ்டம் நீங்கள் பட்டிருந்தால் ஏன் ஒருவரிடமும் அப்போது சொல்லவில்லை?"
"இஷ்டமில்லை; அதனால் சொல்லவில்லை."
"நீங்கள் கஷ்டப்பட்டதாகச் சொல்வதெல்லாம் பொய்; அதனால் தான் சொல்லவில்லையென்று நான் ஊகிக்கிறேன்."
"எனக்குப் பொய் சொல்ற வழக்கம் கிடையாது; உங்களுக்குத்தான் அதுவே தொழில்" என்று உமாராணி பளீரென்று பதில் கூறினாள். இதைக் கேட்டு, கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.
நீதிபதி கோபமாக மேஜையைத் தட்டினார்.
ஆனால், அட்வகேட் நாராயணன் ஒரு ஸ்திரீக்குச் சளைத்து விடுவாரா? அவர் ஒரு கோணல் புன்னகை புரிந்து, "ஆனால், உங்கள் பெயரே ஒரு பொய்யாச்சே?" என்றார். அப்போது, வக்கீல்களிடையே சிரிப்பு உண்டாயிற்று.
"அநாவசியமான விவாதம் வேண்டாம்; குறுக்கு விசாரணையை நடத்தும்!" என்று வாதி வக்கீலைப் பார்த்து நீதிபதி சொன்னார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தியாக பூமி - 4.24. 'மாட்டேன்! மாட்டேன்!', மாட்டேன், நாராயணன், குறுக்கு, அப்போது, ஸ்ரீதரனுடைய, நீங்கள், வந்து, கேஸ், தான், தியாக, பூமி, கஷ்டப்பட்டதாகச், குறைச்சல், கேட்டு, அந்தக், உங்கள், பொய், நீதிபதி, அதனால், சொல்லவில்லை, பதில், அப்புறம், நான், கொண்டிருந்தது, விசாரணை, உமாராணியின், தாம்பத்திய, சொல்லிக், கல்கியின், போச்சு, பெரிய, அவன், அமரர், கோர்ட்டில்