சத்ய சோதனை - பக்கம் 368
இந்த நிலைமையில் ராமதாஸ் விஷயத்தில் நான் என்ன செய்வது? அப்பொழுது அவனுக்கு எட்டு வயது. அவனுக்கு நான் கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று அவனைக் கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான். தனக்கு நல்லது இன்னது என்பதை அந்த வயதில் அவன் முடிவு செய்து கொள்ளுவது சாத்தியமில்லை. ஆனால், அரை குறையான வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும் உள்ள பேதம் அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு வைத்தியப் பழக்கத்தை அவன் அறிவான். தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில் அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது. பயந்து நடுங்கிக்கொண்டே அவனுக்குப் போட்டிருந்த கட்டை அவிழ்த்தேன். புண்ணை அலம்பினேன். அதன்மீது சுத்தமான மண் பற்றும் போட்டேன். பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன். புண் முற்றும் ஆறிவிடும் வரையில் ஒரு மாத காலம் இவ்விதம் கட்டுப்போடுவது தினந்தோறும் நடந்து வந்தது. எந்தத் தொந்தரவுமே இல்லை; சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும் என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.
இதுவும், என்னுடைய மற்றப் பரீட்சைகளும், வீட்டு வைத்திய முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தின. நான் இப்பொழுது அதிகத் தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை மேற்கொண்டும் கையாளலானேன். மற்றும் பல நோய்களுக்கும் இம்முறையைக் கையாண்டேன். புண்கள், ஜு ரங்கள், அஜீரணம், காமாலை ஆகிய நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம் செய்து வந்தேன். அநேகமாகக் குணமாகிக் கொண்டே வந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதில் எனக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 368, புத்தகங்கள், டாக்டர், நான், அவன், அவனுக்கு, சத்ய, பக்கம், இப்பொழுது, செய்து, கப்பல், சோதனை, என்னுடைய, ஆறிவிடும், புண், காலம், இல்லை, எனக்கு, போட்டேன், இருந்த, நீர், சிகிச்சை, சிறந்த, ராமதாஸ், நம்பிக்கை, வைத்திய, என்பதை, வீட்டு