திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

4. மருதம்
| பழனம் படிந்த படுகோட்(டு) எருமை கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு) உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன் கிழமை யுடையன்என் தோட்டு. |
31 |
பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை.
| கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து) இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும் பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன் இணைத்தான் எமக்குமோர் நோய். |
32 |
திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான்.
| கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர! உடைய இளநலம் உண்டாய் - கடைய கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி எதிர்நலம் ஏற்றுநின் றாய். |
33 |
கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய்.
| செந்நெல் விளைவய லூரன் சிலபகல் தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண! பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள் வாரிக்குப் புக்குநின் றாய். |
34 |
செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக.
| வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும் கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன் மாணிழை நல்லார் இளநலம் உண்டவர் மேனி ஒழிய விடும். |
35 |
வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மற்றவர், திணைமொழி, கீழ்க்கணக்கு, ஐம்பது, பதினெண், ஊரன், பாரித்த, நலத்தை, செந்நெல், நல்லூரன், விடும், ஒழிய, குளிர்வயல், வாரிக்குப், இளநலம், எருமை, படிந்த, சங்க, சொரியும், எமக்குமோர், றாய், கதிர்முலை, முன்பு