நற்றிணை - 346. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, தண் கார் தலைஇய நிலம் தணி காலை, அரசு பகை நுவலும் அரு முனை இயவின், அழிந்த வேலி அம் குடிச் சீறூர் ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
5 |
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, இன்று, நக்கனைமன் போலா- என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் |
10 |
மட மா அரிவை தட மென் தோளே? |
நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 346. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அழகிய, சிறிய, சென்று, முகந்து, எட்டுத்தொகை, சங்க, அழிந்த