நற்றிணை - 220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ, குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி, உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், பெரிதும் சான்றோர்மன்ற- விசிபிணி |
5 |
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண், 'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர் தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் கயல் ஏர் உண்கண் குறுமகட்கு அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! |
10 |
பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்;
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம். - குண்டுகட்பாலியாதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 220. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, பெரிய, குறிய, தோழி, தலைமகளை, சிறிய, சூடி, எட்டுத்தொகை, சங்க, சிறு, எம்முடன், கயல்