நற்றிணை - 105. பாலை

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி, விளிபட வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், கடு நடை யானை கன்றொடு வருந்த, நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
5 |
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் பட்டனை, வாழிய- நெஞ்சே!- குட்டுவன் குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டு படு வான் போது கமழும் அம் சில் ஓதி அரும் படர் உறவே. |
10 |
நெஞ்சே ! காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியையுடைய இலவமரத்தின் விளங்கிய கிளைகள் நடுங்கும்படி வீசி; அவை முறியுமாறு கொடிய காற்று மோதியடிக்கின்ற மூங்கிற்புதர் நெருங்கிய இடங்களிலே; கடிய செலவினையுடைய பிடிகள் தத்தங் கன்றுகளுடனே சேர வருந்தாநிற்ப நெடிய நெறி முழுதும் நீரில்லாதொழிந்த நிழல் அற்ற செல்லுதற்கரிய சுரத்தின்கணுள்ள கவர்த்த நெறிகளையுடைய அவ்விடமென் றெண்ணாயாய்; குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழையுடைய குவளையின் வண்டு மொய்க்கும் பெரிய மலரைச் சூடுதலானே மணங்கமழ்கின்ற அழகிய சிலவாய கூந்தலையுடைய நங் காதலி நீங்குதற்கரிய துன்பத்தாலே வருந்தவிட்டு; நீதான் நெடுந்தூரம் வந்துற்றனை; இங்குப் போந்த பின்பு கருதி மீளலுறாநின்றனையாயின் நின் முயற்சி நனி நன்றாயிரா நின்றது, இத்தகைய முயற்சிகளோடு நீ நீடு வாழ்வாயாக !;
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது. - முடத்திருமாறன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 105. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, நெஞ்சே, குட்டுவன், வண்டு, நிழல், வீசி, எட்டுத்தொகை, சங்க, அற்ற